எல்.கணேசன்: சிவப்பாய் நின்றவர்!

எல்.கணேசன்: சிவப்பாய் நின்றவர்!
Updated on
2 min read

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அறுபதாண்டு காலமாக உச்சரிக்கப்பட்டுவரும் பெயர் ‘எல்.ஜி.’ என்கிற எல்.கணேசன் (1934-2026). மொழிப் போர் தளபதி என்கிற அடைமொழி அவரது அரசியல் பங்களிப்பை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும். ‘திராவிட மாணவர் இயக்கத் தளபதியாகச் செயல்பட்டு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை, மாணவர் உலகத்தின் பொதுப் போராட்டமாக வடிவுபெறச் செய்து, ஒரு வரலாற்றுத் திருப்பத்துக்கு வழிகண்டவர்’ என்பது பேராசிரியர் க.அன்பழகனின் நற்சான்று.

மாணவர்களின் தலைவர்: அன்பழகன், நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோர் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து திராவிட இயக்கத்தில் மாணவர் அரசியலுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கினார்கள் என்றால், மாணவர்களின் எழுச்சிமிகு அரசியல் பங்களிப்பை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியவர்களில் எல்.கணேசன் முக்கியமானவர்.

1965இல் ஆட்சிமொழியாகத் தமிழ்நாட்டில் இந்தியை மாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து மாணவர்களே தொடங்கி நடத்திய போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டதிலும் வழிநடத்தப்பட்டதிலும் எல்.கணேசனுக்குப் பெரும்பங்கு உண்டு. அந்த வெற்றியின் விளைவால், மாணவர் தலைவர்கள் சிலர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளையும் பெற்றார்கள்.

காலப்போக்கில், அவர்களில் பலரும் பெயர்களாக மட்டுமே இன்று நினைவுகூரப்படுகிறார்கள். ஆனால் சட்டமன்றம், நாடாளுமன்றம் இரண்டின் ஈரவைகளிலுமே உறுப்பினராக இருந்திருந்தாலும் பெயரளவுக்குக்கூட அமைச்சர் வாய்ப்பு எதையும் பெறாத எல்.கணேசன் தொடர்ந்து அரசியலில் பேசப்படுவதற்குக் காரணம், அவரது இயல்பான தலைமைப் பண்புகள்தான்.

மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்ற மாணவர்களில் பலரும் பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வந்தவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள். திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களின் வேலைவாய்ப்புக்காக ஒவ்வோர் அமைச்சர் அலுவலகமாக ஏறி இறங்கியவர் எல்.கணேசன் என்பதை மொழிப் போராட்ட வீரரும் எழுத்தாளருமான பா.செயப்பிரகாசத்தின் கட்டுரைகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தப் பரிந்துரைப் பணி அவரது வாழ்நாள் பணியாகவே தொடர்ந்தது. அதற்கு அவரது சொந்த அனுபவங்களும் ஒரு காரணம். ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணந்தங்குடியில் பிறந்தவர் எல்.கணேசன். ஏ.டி.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்த ராஜாமடம் மாணவர் விடுதியில் பள்ளிப்படிப்பை முடித்தவர், திருச்சி பொன்மலையில் தங்கி வேலை தேடுவதற்காகவே ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்தார். வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து இளங்கலைப் பட்டத்துக்காகப் பொருளியலும் படித்து முடித்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in