ஏஐ ஏற்படுத்தும் நெருக்கடி: இளைஞர்களின் எதிர்காலம் காப்போம்

வேலைவாய்ப்பின் சவால்களை எதிர்கொள்ளத் தமிழகம் இன்றே தயாராக வேண்டும்
ஏஐ ஏற்படுத்தும் நெருக்கடி: இளைஞர்களின் எதிர்காலம் காப்போம்
Updated on: 
3 min read

நல்ல கல்வி கற்றால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை பல தலைமுறைகளாக இந்தியக் குடும்பங்களில் வலுவாக வேரூன்றியிருக்கிறது. தமிழகத்தில், குழந்தைகளின் கல்விக்காக ஒரு குடும்பம் செய்யும் செலவு வெறும் பொருளாதாரச் செலவாக அல்ல, அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்கான முதலீடாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) வேகமான வளர்ச்சி இந்த நம்பிக்கையின் அடித்தளத்தையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழலை உருவாக்குகிறது. ‘எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தால் வேலை கிடைக்கும்?’ என்பதுடன், ‘நாம் உருவாக்கும் பட்டதாரிகளுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு எந்தெந்த வேலைகள் இருக்கும்?’ என்கிற கேள்வியையும் இன்றே கேட்க வேண்டியுள்ளது.

தொழில்நுட்ப உலகின் முன்னணிச் சிந்தனையாளர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உள்ளிட்டோர், மனிதர்களின் அறிவுசார் (White-Collar) பணிகளில் ஏஐ ஏற்படுத்தக்கூடிய வேகமான மாற்றம் குறித்து எச்சரித்துள்ளனர். இதன் தாக்கம் அலுவலகப் பணிகளுடன் முடிவடையாமல், தானியக்கம் / இயந்திரத் தொழில்நுட்பத்துடன் இணையும்போது உடல் உழைப்பு சார்ந்த (Blue-Collar) பணிகளிலும் விரிவடையக்கூடும்.

கல்வி முதலீட்டின் எதிர்காலம்

தமிழகம் பல தலைமுறைகளாகப் பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வகங்கள், திறன் கட்டமைப்புகளில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக, பொறியியல் கல்விக்காக அரசு / தனியார் துறைகள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

இந்த முதலீட்டின் முழுப் பயன் பல ஆண்டுகளுக்குப் பிறகே கிடைக்கும் என்னும் நிலையில், எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையின் மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க வேண்டியது அவசியம். இது கல்வித் துறையின் பிரச்சினை மட்டும் அல்ல.

தொழில், தகவல் தொழில்நுட்பம், உயர்கல்வி, திறன் மேம்பாடு, தொழிலாளர் நலன், முதலீடு, பொருளாதாரம் ஆகிய அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்த கேள்வியும்கூட! தமிழக இளைஞர்களின் வெளிநாட்டு வேலைவாய்ப்பையும் இதிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது.

வெளிநாட்டில் கல்வி, வேலை, பின்னர் அங்கேயே வாழ்க்கை என்கிற பாதை பல குடும்பங்களின் இலக்காக உள்ளது. ஆனால், ஏஐ காரணமாக அந்நாடுகளின் நிறுவனங்களுக்குத் தேவையான மனிதவளம் குறைந்தால், அதன் தாக்கம் இந்திய இளைஞர்களின் சர்வதேச வேலைவாய்ப்பிலும் வெளிப்படும்.

Loading content, please wait...

X