

அண்மையில், குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை அரசும் மக்களும் இணைந்து மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணம், நாடு முழுவதும் குழந்தைகளிடம் சர்க்கரை நோயைக் கண்டறிவது, நோயை உறுதிப்படுத்துவது, சிகிச்சை வழங்குவது, உடல் பாதிப்புகளைத் தவிர்ப்பது தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையை உருவாக்கியிருக்கிறது.
இந்தியாவின் பொதுச் சுகாதார அமைப்பில் குழந்தைகளுக்கான சர்க்கரை நோய்ப் பராமரிப்பு குறித்து தெளிவாகவும் முழுமையாகவும் ஒருங்கிணைக்கப்படுவது இதுவே முதல் முறை.
குழந்தைகளுக்கும் பாதிப்பு
இந்தியாவில் 10 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொற்றா நோய்களின் பாதிப்பு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மேற்கொண்ட ‘இந்தியச் சர்க்கரை நோய் ஆய்வு’ (India Diabetes [INDIAB] Study) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்படுவது பெரும்பாலும் ‘இரண்டாம் வகைச் சர்க்கரை நோய்’ (Type 2 Diabetes Mellitus). இந்த வகைச் சர்க்கரை நோய் பொதுவாக வளரிளம் பருவத்தினருக்கும் வயதானவர்களுக்கும் அதிகமாக ஏற்படுகிறது.
ஆனால், குழந்தைகளும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த வகை நோய் ‘முதலாம் வகைச் சர்க்கரை நோய்’ (Type I Diabetes Mellitus) என அழைக்கப்படுகிறது.
அண்மையில், டெல்லியிலும் சென்னையிலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், 20 வயதுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் சுமார் 5 பேருக்கு முதலாம் வகைச் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
‘த லான்செட்’ மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு ஒன்றின்படி, இந்தியாவில் சுமார் 8.6 லட்சம் பேர் முதலாம் வகைச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் முதலாம் வகைச் சர்க்கரை நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.