

புதிய மும்மொழிக் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விரிவான விளக்கங்களை 29.06.2026 அன்று செய்திக்குறிப்பு வாயிலாக வெளியிட்டிருக்கிறது சிபிஎஸ்இ வாரியம். தற்போது ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மூன்றாவது மொழியை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
இதன்படி, ஏற்கெனவே இரண்டு இந்திய மொழிகளைப் பயிலும் மாணவர்கள், கூடுதலாக ஓர் இந்திய மொழியையோ அல்லது அயலக மொழியையோ தேர்வு செய்யலாம். ஓர் இந்திய மொழியையும் ஓர் அயலக மொழியையும் பயிலும் மாணவர்கள், மூன்றாவது மொழியாகக் கட்டாயம் மற்றொரு இந்திய மொழியைத் தேர்வு செய்ய வேண்டும்.
இரண்டு அயலக மொழிகளைப் பயின்றுவரும் மாணவர்களுக்கு, ஓர் இந்திய மொழியை மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இது 2026-2027ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு மாணவருக்கு மட்டுமே ஆன விலக்கு.
இந்திய மொழிகளின் பட்டியலில் இந்தி, சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்க மொழி, பஞ்சாபி, குஜராத்தி, ஒடியா, அஸ்ஸாமி உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றுள்ளன. அயலக மொழிகளின் பட்டியலில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், அரபி, ஸ்பானிய மொழி போன்ற மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் மூன்றாவது மொழிக்கான இறுதித் தேர்வைப் பள்ளிகளே நடத்தி மதிப்பெண்களை வழங்கும். இருப்பினும், அதற்கான கல்வித் தரநிலைகளையும் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களையும் சிபிஎஸ்இ வாரியமே நிர்ணயிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது ஏழு அல்லது எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் ஏற்கெனவே இரண்டு அயலக மொழிகளைப் பயின்றுவந்தால், அவர்கள் கூடுதலாக ஓர் இந்திய மொழியைக் கட்டாயம் பயில வேண்டும் என்றும், அந்த நடைமுறை 10ஆம் வகுப்புவரை தொடரும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தற்போது ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் கட்டாயம் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், இவர்கள் 10ஆம் வகுப்பு பயிலும்போது மூன்றாவது மொழிக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.