

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் எதிர்பாராத அரசியல் மாற்றம் நடந்துள்ளது. இந்த மாற்றத்துக்குக் குழந்தைகள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
பலர் தங்களின் வாக்குரிமையைப் பிள்ளைகளின் விருப்பப்படி நிறைவேற்றியிருப்பதை அறிய முடிகிறது. வருங்கால இந்தியா வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்று கல்வியாளர்கள் கூறுவது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொய்யாக்கப்பட்டே வருகிறது. தமிழ்நாட்டின் வருங்காலம் திரையரங்குகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பதே தொடர்ந்து உண்மையாகிவருகிறது.
தீர்மானிக்கும் திரைத் துறை
சமூக மெய்யியலின்படி மக்களின் நலத்தை, வளத்தை, எதிர்காலத்தைத் தீர்மானிப்பது அரசியல். எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. அதைப் போலவே மக்களின் விழிப்புணர்வும் அறிவுநிலையும் அரசியலைத் தீர்மானிப்பதையும் மறுக்க முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் திரையுலகம் மீதான கவர்ச்சி பெருமளவில் இருப்பதைக் காண முடிகிறது.
கறுப்புப் பணம் அதிகமாகத் திரைப்படத் தொழிலில் பயன்படுத்தப்படுவதைப் பலரும் அறிந்திருப்பார்கள். இது குழந்தைகளுக்குத் தெரியாது. ஆனால், புகழ்பெற்ற நடிகரால் ஜனநாயக நெறியுடைய தூய ஆட்சியை மலர வைக்க முடியும் என்று பெரும்பாலான இளைய தலைமுறையினர் நம்புவதைத் தேர்தல் முடிவு சொல்கிறது.
இந்த நம்பிக்கைதான் ஆட்சிமாற்றத்தை உருவாக்கியுள்ளது. நிகழ்கால அரசியல் கசப்புகள், நல்ல அரசியலுக்கான எதிர்பார்ப்புகள் இரண்டும் சேர்ந்து மாற்றம் தேவை என்கிற எண்ணத்தை இளைய தலைமுறையிடம் ஏற்படுத்தியுள்ளதையும் மறுக்க முடியாது.
எது எப்படியோ, இளைஞர்களின் நம்பிக்கையை உறுதிசெய்யும் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும். அது மட்டுமல்லாமல், அரசியல் மாற்றத்துக்கு அறிந்தோ அறியாமலோ துணைசெய்த குழந்தைகளின் நலன்களையும் உரிமைகளையும் மதிக்கின்ற, பாதுகாக்கின்ற ஆட்சிக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகளுக்கு நன்றிக்கடன்
இந்தத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு வாக்குரிமை இல்லாத குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, குழந்தைகளுக்குப் புதிய அரசு கூடுதலாகக் கடமைப்பட்டுள்ளது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். புதிய ஆட்சியில் குழந்தைகளின் கல்வி நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.