

“யாரிடம் எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாமல் பேசுகிறாய்!’’, “அவர் பேச்சிலேயே எதையும் சாதித்துவிடுவார்!”, “நீங்கள் என்னிடம் உதவி கேட்கிறீர்களா? அல்லது உத்தரவு போடுகிறீர்களா?”, “உங்களைக் குறை சொல்வதற்காக நான் இதைச் சொல்ல வரவில்லை” - இவைபோன்ற பல தொடர்களை நாம் கேட்டிருப்போம். இங்கு ஒன்று தெளிவாகத் தெரிகிறது. பேசுபவருக்குத் தமிழ் இலக்கணத்தில் நிறைய அறிவு இருக்கலாம். ஆனால், நடைமுறையில் அவர் பயன்படுத்துகிற தொடர்கள் அவரது பேச்சின் நோக்கத்தைச் சரியாக வெளிப்படுத்தவில்லை.
மறுபுறம், கேட்பவரும் பேசுபவரின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாமல் போகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் நல்ல உறவுகளை உருவாக்கித் தக்கவைத்துக்கொள்ள மிகவும் உதவுவது நமது பேச்சுமுறையே. ஒருவரின் சரியான பேச்சுமுறையானது பகைவர்களையும் நண்பர்களாக மாற்றியமைக்கும்; அதுபோன்று, தவறான பேச்சுமுறையானது நண்பர்களையும் பகைவர்களாக ஆக்கிவிடும்.
மொழிக்கல்வி: மாணவர்களுக்குப் பள்ளிகளில் தமிழ்ச்சொற்கள், தொடரமைப்புகள், அவற்றின் இலக்கணக் கூறுகள் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே கற்றுக்கொடுத்தால் போதாது. அவற்றைப்பயன்படுத்தி, தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் பலவகையான பேச்சுச்செயல்களை எவ்வாறு மேற்கொள்வது என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பேச்சுச் செயல்களுக்குக்காகத்தான் இலக்கணக் கல்வியே தவிர, இலக்கணப் பாடத்தில் வெறும் மதிப்பெண்கள் பெறுவதற்கு இல்லை.