

காவிரிப் படுகை குறுவைச் சாகுபடிப் பரப்பு இந்த ஆண்டு ஆறு லட்சம் ஏக்கருக்கு மேல். மழையிலேயே நடந்த முழு விளைச்சலின் கொள்முதலும், வெளி மாவட்ட அரவைக்கு நெல்லைக் கொண்டுசென்றதும் பெரிய சாதனை. அண்மைக் கால 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் மூன்று லட்சத்துக்குச் சற்று அதிகமாகவும் ஐந்து ஆண்டுகள் ஒரு லட்சம் ஏக்கர்வாக்கிலும்தான் குறுவைச் சாகுபடி நடைபெற்றது.
குறுவைக்கு வழக்கமான பரப்பு என்று எதுவும் நிலைப்பதில்லை. குறுவைப் பட்டத்தின் தன்மையே அதுதான். இந்தப் பின்னணியிலும் இந்த ஆண்டு சாகுபடியைச் சாதனைக் குறுவை என்று சொல்லலாம். காவிரிப் படுகைப் புதுப் பகுதிகளில் குறுவைச் சாகுபடிக்குத் துணிந்த விவசாயிகளையும் அவர்களிடம் வந்த மாற்றத்துக்காகப் பாராட்ட வேண்டும்.