

பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடற்கலை பற்றி அதிகம் பேசும் நூலாகச் சிலப்பதிகாரத்தைச் சொல்லலாம். அரங்கேற்று காதை, கானல் வரி, ஊர்காண் காதை, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை, நடுகற்காதை எனச் சிலம்பின் பல காதைகளில் ஆடற்கலைத் தரவுகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
‘பாட்டும் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து’ ஆடிய மாதவி, பதினோறு ஆடல்களையும் நிகழ்த்திப் பெருமிதமுற்றதைக் கடலாடு காதையில் காண்கிறோம். அந்தப் பதினோறு ஆடல்களில் ஒன்றுதான் குடக்கூத்து.