

என்னைச் சுற்றி இருந்த மனிதர்கள் நிலம், உழைப்பு, நீதி இந்த மூன்றுக்குமிடையே சிக்கிக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை, எங்களிடம் ஏக்கர் கணக்கில் நிலம் இருந்த என் பால்ய காலம் முதல் நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். அவர்களது பெரும்பாலான துயரங்கள், செய்திகளின் ஓரமாகவும், வரலாற்றின் அடிக்குறிப்புகளாகவும் மட்டுமே, பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் சலியாத உழைப்பும், குறைந்த கூலியும், வலி தாங்கும் உறுதியும் எதிர்ப்பில்லா அமைதியும் பெரிதாகப் பேசப்படவில்லை. அந்த மௌனத்துக்குள் நுழைந்து ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்பி,ஏழை விவசாயிகளின் உரிமைக்கும் கெளரவத்துக்குமான அர்ப்பணிப்பான செயல்களை செய்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இந்த சமூகத்துக்காக அவர் பட்ட பாடுகளின் மீதான பிரமிப்பே இந்த படத்தை பதிவு செய்ய வேண்டும் என்று என்னை தூண்டியது.