
சென்னை புத்தகக் காட்சியைச் சாத்தியப்படுத்திவரும் ‘பபாசி’ தொடங்கி 50 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. அதற்கான பொன்விழா ஆண்டு சிறப்பு இலச்சினை மற்றும் இணையதளம் அறிமுக விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், பபாசி மற்றும் சென்னை புத்தகக் காட்சி கடந்து வந்த பாதை குறித்து கவிதா சொக்கலிங்கம் எனப்படும் சேது சொக்கலிங்கம் ‘இந்து தமிழ் திசை’ வாசகர்களுக்காகத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பபாசி தலைவர், துணைத் தலைவர், நிர்வாகக் குழு உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளுடன் பபாசியோடு நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் அவரது நேர்காணல்...
பபாசி (BAPASI) தனது 50வது ஆண்டில் தடம் பதிப்பது மகத்தான சாதனை. இந்த நீண்ட பயணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நீண்டகால கூட்டு உழைப்பின் பிரதிபலனாகவே இந்த வெற்றியைப் பார்க்கிறேன். பதிப்பகங்கள், எழுத்தாளர்கள் மட்டுமன்றி தொடர்ந்து ஆதரவு தந்துகொண்டிருக்கும் வாசகர்கள் எனப் பலரும் இதற்குப் பின்னால் இருக்கிறார்கள். எண்ணற்ற வாசகர்கள், பல்வேறு அறிஞர்கள், சாதனையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரையும் புத்தகக் காட்சி சந்தித்துள்ளது.
13 அரங்குகள் மட்டுமே கொண்டு தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி, தற்போது 1000 அரங்குகளோடு வெற்றிநடை போடுகிறது. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சிகளை விட மிகப் பிரம்மாண்டமாய், லட்சக்கணக்கில் மக்கள் குவியும் நிகழ்வாக சென்னைப் புத்தகக் காட்சி செயல்பட்டு வருகிறது.