

கல்லணையில் முறைப் பாசன (Turn System / Rotational Water Supply) அறிவிப்புகள் வருவது இயல்பு. மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் 45 நாள்கள் மட்டுமே தண்ணீர் என்கிற அறிவிப்பு முதல் முறையாக வந்திருப்பது இந்த ஆண்டில்தான்.
அதேநேரம் கர்நாடகத்தின் மாலூர்பட்டினத்தில் கிடைத்த கல்வெட்டு, தமிழ் மன்னர் ராசேந்திரசோழன் அங்கு நீர்நிலைகளை உருவாக்கியதாகச் சொல்கிறது. வெள்ளப் பேரிடர்களில் தமிழகம் மூச்சைப் பிடித்துத் தன்னை மூழ்கடித்துக்கொண்டு, கர்நாடகத்தின் தலைக்கு ராட்சதக் குடைகள் விரித்துப் பாதுகாத்ததே பல்லாண்டு காலக் காவிரியின் வரலாறு.
கைவிரிக்கும் கர்நாடகம்: இவ்வளவு இருந்தும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தமிழகத்துக்குக் கிடையாது என கர்நாடகத்தால் இப்போது எப்படிப் பேச முடிகிறது? நீர் போதாவிட்டாலும் பற்றாக்குறைக் காலப் பகிர்வு எனக் காவிரி நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் கூறிய தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்துக்கு நீர் தர கர்நாடகம் மறுக்கிறது. தமிழகத்தின் தற்போதைய அணுகுமுறை மென்மையானது.
24.09.2026 அன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கர்நாடகத்தின் நீர் திறப்பு அளவை 7.776இலிருந்து 5.18 டிஎம்சி ஆகக் குறைத்தது. இதையும்கூடச் செயல்படுத்த முடியாது என கர்நாடக அமைச்சர் சலுவராயசாமி அறிவிக்கிறார். கர்நாடகம் இவ்வாறு கூறுவது நீதிமன்ற அவமதிப்புதான். ஆனால், இத்தகைய வழக்குகளை ஜெயலலிதா ஆட்சிக்குப் பின் தமிழக அரசு தாக்கல் செய்ததே இல்லை.
பற்றாக்குறைக் காலப் பகிர்வு என்பது மானுட வளர்ச்சியில் உருவான நீதிக் கோட்பாடு. பண்டைய தமிழகத்திலேயே இதற்குச் சான்றுகள் உண்டு. தட்டுப்பாடான காலங்களில் தண்ணீர் தலைமடைக் கடைமடைப் பகிர்வு பற்றி பொ.ஆ. (கி.பி.) 1122இல் விருதான பயங்கர வடநாட்டுப் பூலோக மாணிக்கத்து சதுர்வேதிமங்கலத்துச் சபையாரின் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. ‘பண்டுநீர் பாயும் வாய்க்கால்’ என்கிற இந்தச் சொற்றொடர், குலோத்துங்க சோழன் காலத்திலும் உண்டு.
கர்நாடகம் ஒருபோகச் சாகுபடிக்கே தடுமாறுவதாகவும் தமிழகம் பல போகங்கள் சாகுபடி செய்வதாகவும் கூறிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இருபோகச் சாகுபடியை இப்போதும் தொடர முடியுமா என்பதுதான் கர்நாடக ஹோசஹள்ளி பகுதி உழவர்களின் கவலையாகும். நீர்ப் பகிர்வு, மேகேதாட்டு ஆகிய இரண்டு பிரிவுகளில் காவிரிப் பிரச்சினை வெப்பமாகத் தகிக்கிறது.