

2022ஆம் ஆண்டின் மே மாதத்தில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது அப்போது வரவேற்பைப் பெற்றது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மே மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட்டது அப்போதுதான். 2024இல் தாமதமாக ஜூலையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
1934இல் உருவாக்கப்பட்ட வழக்கப்படி 2023, 2025 உள்ளிட்ட ஆண்டுகளில் ஜூன் 12இல் மேட்டூர் திறக்கப்பட்டது. 92 ஆண்டுகால மேட்டூர் அணை வரலாற்றில் 72வது முறையாக தண்ணீர் திறக்கும் தேதி மாறுகிறது (மேட்டூரில் தண்ணீர் மூடப்படும் ஜனவரி 28 என்கிற தேதி அநேகமாக இதுவரை மாறியதில்லை).
கடந்த சில ஆண்டுகளில் காலத்தில் பொழிந்த தென்மேற்குப் பருவ மழை, தண்ணீரை வாரி வழங்கியது. கடந்த நீர்ப்பாசன ஆண்டில் (2025-26) பிலிகுண்டுலுவில் கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு 2026 மே 24 வரை 176.685 டிஎம்சி என்றாலும், கூடுதலாக 329.166 டிஎம்சியாகவே கிடைத்தது.
வானம் அள்ளித் தந்த மிகைநீரை எந்தச் செயற்கை நிகழ்வும் தடுக்க முடியவில்லை. கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் மட்டும் குறுவை சாகுபடி 1.37 லட்சம் ஏக்கராகவும் ஒட்டுமொத்தமாக காவிரிப் படுகை குறுவை சாகுபடி 3.5 லட்சம் ஏக்கர் அளவிலும் அமைந்தது.
தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சம் டன். குறுவை சாகுபடி அளவு கடந்த ஆண்டு 6.09 லட்சம் ஏக்கர் என்கிற சாதனையை நெருங்கியது. ஆனால், தற்போது ஓர் ஆபத்து நெருங்கிக்கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தின் கனவு
மேகேதாட்டு அணை கட்டுமானத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் பெற்றுள்ள வலிமையான உத்தரவு, அம்மாநிலத்தின் புதிய முதல்வர் டி.கே.சிவக்குமாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
புவியியல் வரைபடத்தில் காவிரிப் பாசனத்தில் மேகேதாட்டு கர்நாடகத்தின் கடைசியிலும் தமிழகத்தின் தலைவாசலிலும் அமைந்துள்ளது; காவிரியின் குறுக்கே மறித்து 67.16 டிஎம்சி கொள்ளளவில் ரூ. 9,000 கோடி செலவில் கர்நாடக அரசு கட்டுவதற்குத் திட்டமிடும் அணை என்பது டி.கே.சிவகுமாரின் நெடுநாள் ஆசை.
கோவிட் 19 பொதுமுடக்கத்தின்போது மேகேதாட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த, எதிர்க்கட்சியாக இருந்தபோதே 15 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் 111 கி.மீ. தொலைவுக்கு ஒரு குழுவோடு அவர் பாதயாத்திரை நடத்தினார்.