

அத்தலையும் விளிம்புநிலை மக்களின் வாழ்வுலகைத் தமிழில் அசலாகத் தந்தவர் ஜி.நாகராஜன். அதிலொரு கதை ‘யாரோ முட்டாள் சொன்ன கதை.’
பாக்கியம் என்ற பெண், ஜமீன்தார் வீட்டுப் பையனின் மோகத்தில் விழுகிறாள். அவனால் ஏமாற்றப்பட்ட பாக்கியம் லூஸ் மணியை மணந்துகொள்ள நேர்கிறது. பாலியல் தொழில் தரகரான பரமன் என்ற ரவுடியின் தொடர்பால் பாக்கியமும் அந்தத் தொழிலுக்கு செல்கிறாள். இந்த கெட்ட சகவாசத்திலிருந்து விடுபடும்படி கணவன் மணி கெஞ்சுகிறான். சண்டை போடுகிறான். அவள் தன் இஷ்டப்படி நடந்து கொள்கிறாள். மணி, பரமனுக்குமான வாக்குவாதம் சண்டையாக மாறி கொலையில் முடிகிறது. தப்பிக்க வழி தெரியாமல் அவன் ஓடுகிறான். இது கதை.
பாக்கியத்தால் சிறுசிறு பயன்பெறும் பக்கத்துவீட்டு கிழவி, கிழவன் இவளது இழிதொழிலை தட்டிக்கேட்காமல் இவனது பாமரத்தன்மையை ஏசுகிறவினோதத்தை கதைத் திறக்கிறது. இவளது போக்கை கட்டுப்படுத்த முடியாது பிரிந்து விட முடிவெடுத்த நாளில் ‘‘வீட்டை எழுதி வை, மகனைத் தரமாட்டேன், ஆறு வருசத்துக்கு பத்தாயிரம் தா’’ என்று சண்டையாக எழுந்து முடிவற்று அடங்கிப்போனதைக் காட்டுகிறது. இப்படி எல்லாத் திக்குகளிலும் முன்னும் பின்னுமாகத் தட்டி, நினைவலைகளை எழுப்பி எழுப்பி அவனது முழுவாழ்க்கையை நிரப்பி பெருக்கி நிறுத்துகிறது கதை.