

ஜீ.முருகன் துல்லியமும் எளிமையும் கூடிநிற்கும் சித்தரிப்புகளின் வழியே, வாசகரைப் பிடிபடாத மாயத்தன்மையில் நிறுத்திவிட்டு விலகிக்கொள்கிறார். விடைகளை நேரடியாகத் தராமல், வாசகரையே தேடத் தூண்டும் திகைப்பில் கதையை முடிப்பது இவரது பாணி. கதைக்குள் அர்த்தங்களைத் தேட முனை
வதை விட, தற்செயல்களும் அசந்தர்ப்பங்களும் நிகழும் கணங்களை அப்படியே புனைவுக்குள் கொண்டுவரவே முயல்கிறார். அதற்குச் சிறந்த சான்று, அவரது ‘காண்டாமிருகம்’ சிறுகதை.
அண்ணி ஒரு சந்தர்ப்பத்தில் காண்டாமிருக வடிவிலான உண்டியல் ஒன்றைக் கொண்டுவந்து, வீட்டில் உள்ளாடைகள் அடுக்கி வைக்கும் இடத்தில் ஒளித்து வைக்கிறாள். புதிய ஒரு ரூபாய் நாணயங்களை அதில் சேமிக்கவும் தொடங்குகிறாள். கொழுந்தப் பிள்ளையோ, குடும்பத்தின் மற்ற சிறுவர்களோ ஒரு ரூபாய் நாணயம் கொடுத்தால், அதற்கு நிகராகவோ கூடுதலாகவோ அவர்களுக்குத் தின்பண்டங்களை வாங்கித் தருகிறாள்.
ஒரு கட்டத்தில் கணவனின் தம்பி, அண்ணி ஒளித்து வைத்திருக்கும் அந்த உண்டியலைக் கண்டடைகிறான். மெல்ல அடிவயிற்று அடைப்பைத் திறந்து காசுகளைத் திருடவும் செய்கிறான். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒருநாள் அந்த உண்டியல் காணாமல் போகிறது; பின் திரும்ப வருகிறது; மீண்டும் காணாமல் போகிறது; மீண்டும் திரும்புகிறது; பிறகு நிரந்தரமாகவே மறைந்துவிடுகிறது. யார் இதைச் செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டாமலேயே கதை நகர்கிறது.