

மணிக்கொடி எழுத்தாளர்களுக்குப் பின், தமிழில் சுமார் 35 ஆண்டுகள் கோலோச்சிய நவீனத்துவ எழுத்துமுறை உளவியல், இருத்தலியல், அந்நியமாதல், வர்க்க முரண்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கதைப் போக்கைத் தீர்மானித்தது. முரண்களையும் சிக்கல்களின் வேர்களையும் கச்சிதமான வடிவில் முன்வைக்கும் இந்த உறுதியான நடைமுறையை முற்றிலுமாகத் தவிர்த்து, 1980களில் முதன்முறையாக ஒரு மாற்றுச் சொல்முறையைக் கையாண்டவர் சுரேஷ்குமார இந்திரஜித்.
நன்மை, தீமை என மனித குணங்களைப் பிரிக்காமல், இரண்டுமே மனிதனின் இயல்பூக்கம் என்ற பார்வையோடு அவர் எழுதினார். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் கதைசொல்லும் பாணியை உள்வாங்கி, சுதந்திரமான தொனியில் மனித மனவிசித்திரங்களைப் பகற்கனவின் சஞ்சாரமாக வெளிப்படுத்தினார். சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘மாபெரும் சூதாட்டம்’ சிறுகதை இத்தகைய விசித்திரமான சொல்முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கதைசொல்லியின் நண்பன் சூரி; அவனுடைய தாத்தா ஜாதகக் கணிப்பில் வல்லவர். அவர் எழுதிய நூல் ஒன்றின் கைப்பிரதியை சூரி கதைசொல்லியிடம் தருகிறான். அதை அவன் வாசித்துப் பார்க்கிறான். சூரியின் தந்தை, சீட்டாட்டத்தில் ஒவ்வொருவரும் செய்யும் தந்திரங்கள், தந்திரங்களையும் மீறி சீட்டுகளின் சேர்க்கையால் நிகழும் முடிவுகள், கணவன்-மனைவி ஆடும் சீட்டாட்டத்தில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள், உயர் நீதிமன்றத்திற்குள் நுழைந்து அலையும் அலைச்சலின் திகைப்பு, சூரியும் கதைசொல்லியும் ஆடிய ஆட்டத்தின் கூர்மை என அந்த நோட்டுப் புத்தகத்தின் குறிப்புகளோடு கதை முடிகிறது.