

பெண் இருப்பின் நியாயங்களை தனது கதைகளில் தொடர்ந்து பேசிவருபவர் அம்பை. உயிர்த்துடிப்பு மிக்க பெண்கள் உருவான அளவு, அம்பையின் கதைகளில் ஆண்கள் உருவாகி வரவில்லை. ஆனால் ‘மல்லுக்கட்டு’ கதையில், அதற்கு மாறாக, ஆண் பெண் இயல்புணர்வோடு உருவாகி உள்ளனர்.
இசைஞானம் மிக்கவரான கதிர்வேல் பிள்ளையிடம் இசையார்வம் பெருகி வழியும் ஏழைச் சிறுமி செண்பகம் வந்து சேர்கிறாள். குருவின் மகன் சண்முகம் தன் தந்தையின் இசைஞானம் தனக்குத் தானாக வந்துவிடும் என்று மேட்டிமைத்தனத்தோடு கற்கிறான். மற்ற மாணவர்களைவிட செண்பகத்திடம் அளப்பறிய இசையாற்றல் புதைந்திருப்பதைக் கண்ட பிள்ளை, கச்சேரிகளுக்கு முன் நிறுத்தி வளப்படுத்துகிறார்.
சண்முகம், காதல் என்ற வலையில் அவளை வீழ்த்துகிறான். திருமணத்திற்குப் பின் அவள் கச்சேரி செய்யக்கூடாது என்று தடுத்து முடக்குகிறான். அவனுக்கு வாய்த்த இசையைக் கொண்டு பிரபலமடைகிறான். வீட்டில் செண்பகத்திடம் இசை கற்க வரும் பிள்ளைகள் அவளது மேதமையை அறிகின்றனர். 25 ஆண்டுகள் கணவனுக்கு கச்சேரியில் இளஞ்சூட்டு பால் தரவும், பின்னால் அமர்ந்து தம்புரா பிடிக்கவுமாக காலம் கழிகிறது. ஒரே ஒரு சந்தர்ப்பம், ஒரு கச்சேரியில் பாடும்படி சோமு என்ற சிஷ்யனின் குறும்பால் வாய்க்கிறது. அச்சிறிய சந்தர்ப்பத்தை பற்றிக்கொண்டு பாடுகிறாள். அற்புதமான குரலால் அரங்கில் கைதட்டு எழுகிறது. அவளது இசைஞானம் பொங்கத் தொடங்குகிறது. கணவன் மிரண்டு போட்டியை எதிர்கொள்ள முயல்கிறான். இது கதை.