

வாழ்வின் இயல்புகளை ஒடுக்கும் மரபின் இரும்புக் கவசத்தைத் தகர்த்தவர் புதுமைப்பித்தன்; அதே மரபின் இறுக்கத்தைத் தளர்த்தி, அதனைப் புதியதாக மலரச் செய்தவர் ஜெயகாந்தன். முரண்பட்ட மோதல்களுக்குள் மேன்மையை முன்னிறுத்தி, அர்த்தமிக்கதாக மாற்றும் புதிய பார்வை ஜெயகாந்தனிடம் துலங்கியபடியே செயலாற்றி இருக்கிறது. அவரின் சிறந்த கதைகளுள் ஒன்று ‘குருபீடம்’.
பாத்திரங்களின் முரண் அழுக்கு உடலோடு, எது கிடைத்தாலும் தின்று, சத்திரத்தில் நாற்றத்தோடு தூங்கும் ஓர் ஒழுக்கமற்ற பிச்சைக்காரன் அவன். அங்கு மழைக்கு ஒதுங்கிய தொழுநோய் கொண்ட பிச்சைக்காரியை இழுத்துச் சல்லாபிப்பவன்; எந்தக் கவலையும் அற்றவன். அப்படிப்பட்டவனை, முருகன் கோயில் மடப்பள்ளியில் வேலை செய்த ஓர் இளைஞன் தன் குருவாகக் காண்கிறான். அவனுக்குப் பணிவிடைகள் செய்கிறான். இந்த விசித்திரமான செயல், அந்தப் பிச்சைக்காரனுக்குள் மெல்ல மாற்றத்தை நிகழ்த்துவதுதான் ‘குருபீடம்’ கதை.