

கோவேத. சுவாமிநாதன் கதைகளைத் தமிழ்ச் சமூகத்தின் கரிய ஆன்மா எனலாம். பரந்துபட்ட வாழ்வியல் கோலத்தோடு மனிதர்களிடையே புதைந்திருக்கும் சாதிய கீழ்மைகள் சக மனிதர்களை வெறுப்புடன் ஒதுக்குவதை மிகையில்லாமல் உயிர்ப்புடன் காட்டும் கதைஞர் சுவாமிநாதன்.
கோம்பை மலை அடிவாரத்தில் கடலைப் பம்பல் வருகிறது. சற்றுத் தொலைவான கிராமங்களில் இருந்து கடலை எடுக்க குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். பத்து நாள் இருப்புவேலை. பம்பல் தொடங்கிவிட்டதை அறிந்த சற்குணம் கடலைப் பம்பலுக்குச் செல்லவேண்டுமெனக் குதிக்கிறான். மனைவி மரியமுத்துவோ, வயிற்றுப் போக்கில் அவதிப்படும் மகளையும் கைக்குழந்தையையும் வைத்துக்கொண்டு இருப்பு வேலைக்குப் போகமுடியாது என்கிறாள். சற்குணம் சவடால் பேர்வழி.
தொடர்ந்து ஓரிடத்துக்கு வேலைக்குச் செல்பவர்களை கூலி சரியில்லை, தோட்டக்காரன் சரியில்லை என்று வேலையைக் கெடுத்துவிடக் கூடியவன். வேறு வழியில்லாமல் பொட்டி சட்டிகளை சுமந்துகொண்டு கணவனுடன் கோம்பை வருகிறாள். வந்த இடத்தில் ஏற்படும் அனுபவம்தான் ‘கடலைப் பம்பல்’ கதை.