

அடக்கமான தொனியில் அதே நேரம் ஒரு விசயத்தின் முழுமையை தன் கதைகளின் வழி காட்டிவிடக் கூடிய எழுத்துத் திறன் பெற்றவர் அசோகமித்திரன். உணர்ச்சிகரமான சூழலிலும் ஒரு பிரச்சனையை எல்லா கோணங்களில் விலகி நின்றுப் பார்த்து எழுதும் எழுத்து முறையை இயல்பாக பெற்றிருக்கிறார். அவர் எழுதிய மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று ‘காத்திருத்தல்.’
‘காத்திருத்தல்’ கதைமாந்தன் தன் கட்சி சமூகத்துக்கு நல்ல பங்களிப்பு செய்யும் அடிப்படை கொள்கையுடன் இயங்குவதாக நம்பி உழைக்கிறான். தேர்தலில் நின்ற தன் கட்சிக்காரருக்கு நம்பிக்கையுடன் தேர்தல் பணி ஆற்றுகிறான். ஆனால் தேர்தலில் இவன் கட்சி தோற்றுவிடுகிறது. தோற்றுவிட்ட மறுநாள் இரவு இவன் வீட்டை கூலிப்படையினர் கல்லெறிந்து தாக்குகின்றனர். இதனை மனைவி மற்றும் மைத்துனனுடன் எதிர்கொள்கிறான்.
அவர்களை விரட்டி அடிக்கிறான். மறுநாள் இரவு மறுபடி எப்படியும் பெரும் பட்டாளத்துடன் வந்து தாக்கக்கூடும் என்று மனைவி, குழந்தைகளைத் தாய்வீட்டுக்கு அனுப்புகிறான். தாக்குதலை எதிர்நோக்கி அவன் நேற்று நடந்தவற்றுடனும் இன்று நடப்பனவற்றுடனும் நினைத்து வீட்டில் காத்திருக்கிறான். இது ‘காத்திருத்தல்’ கதை.