

மௌனி தனது கதைகளில், அக உலகைப்போலவே இந்த யதார்த்த உலகையும் ஒரு கனவு படிமத்தோற்றமாகக் கண்டு எழுதுகிறார். அதற்கு மாயாவாதம் என்ற தத்துவதளத்தில் வைத்து அவர் வாழ்க்கையைப் பார்க்கிறார். அதற்கான ஒரு எழுத்து முறையை மௌனி கையாள்கிறார். மனவெளியில் தோன்றும் விசித்திரமான காட்சிப்படிமங்களைக் கொண்டு அவர் புனையும் உலகம் தனித்துவமானது. அத்தகைய தனித்துவத்துக்குச் சான்றாக விளங்கும் கதைகளுள் ‘அத்துவானவெளி’ மிக முக்கியமானது.
அத்துவானவெளியின் மர்மத் தொடக்கம்: ஒரு மாலைப் பொழுதில் இருள் மெல்லப் பரவத் தொடங்குகிறது. கதையின் நாயகன் வாசலுக்கு வந்து காலார நடக்கத் தொடங்குகிறான். அப்போது அவன் வீட்டு முன்னால் இருக்கும் மரம் வழக்கத்திற்கு மாறாகத் தெரிகிறது. அவன் நடக்கத் தொடங்கிய கணமே, பின்னாலிருந்து ஒரு குரல் கேட்கிறது. “உங்களைத் தேடித்தான் வந்தேன்” என்று சொல்லும் அந்த மர்ம நபரிடமிருந்து தப்பிக்க அவன் முயல்கிறான்.
கோவிலுக்குச் செல்வதாகவும் நண்பர் வீட்டுக்குச் செல்வதாகவும் சாக்குப்போக்குச் சொன்னாலும், வந்தவன் விடாமல் பின் தொடர்கிறான். இந்த மர்மப் பயணம் இறுதியில் ஒரு சுடுகாட்டில் வந்து நிற்கிறது. அங்கே காணும் விசித்திரக் காட்சியுடன் கதை முடிகிறது.