

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்துப் புகார் அளித்ததால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளான பெண்ணுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நீதி வழங்கியிருப்பது மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அரசு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இருக்கும் பொறுப்பை இச்சம்பவம் அழுத்தமாக உணர்த்துகிறது.
சென்னையில் உள்ள ரயில்வே தொழிலாளர் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பணிபுரிந்த ஒரு பெண், உதவிச் செயலாளராக இருந்த ஜே.நாககேசரி என்பவர் தன்னைப் பாலியல்ரீதியில் துன்புறுத்துவதாக 2001லிருந்து சங்கத்தின் தலைவர், தேசிய, மாநில மகளிர் ஆணையங்கள், தெற்கு ரயில்வே, மனித உரிமைகள் ஆணையம், முதல்வரின் தனிப்பிரிவு, காவல் துறை எனப் பல தரப்புகளில் புகார் அளித்து வந்தார்.
2004இல் அந்தப் பெண் இடைநீக்கம் உள்படப் பல நெருக்கடிகளைச் சந்தித்த சூழலில், தேசிய மகளிர் ஆணையம் அவரது இடைநீக்கத்தை ரத்து செய்யும்படி உத்தரவிட்டது. ஒழுங்கு நடவடிக்கை என்னும் பெயரில் பழிவாங்கப்படுவது தொடர்ந்ததால், அவர் ஓய்வுபெறுவதும் தடைபட்டது.