

நீதி தேவதையின் தராசுத் தட்டில் இன்று ஒரு புதிய எடைக்கல்லாகச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வந்து அமர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் செயற்கை நுண்ணறிவுக் குழு வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரைவு விதிமுறைகள், காலத்தின் கட்டாயத்தை உணர்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு. மனிதர்களின் முதன்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நீதித் துறைச் சுதந்திரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த வரைவு உருவாக்கப்பட்டுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.
நீதியரசரின் மூளையும் கணினியின் வேகமும் இணையும் இந்தப் புதிய பயணம், சட்ட நடைமுறைகளை எளிமையாக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அதே வேளையில், மனித மாண்புகளைத் தொலைத்துவிடக் கூடாது என்பதே நம் அனைவரின் கவலை. இந்தத் தொழில்நுட்பத்துக்கும் நீதித் துறைக்குமான உறவு, ஒரு சிறந்த உற்ற துணையாகப் பரிணமிக்க வேண்டும். இந்த வரைவின் சில முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.
அனுமதிக்கப்பட்ட ஏஐ பயன்பாடுகள்
செயற்கை நுண்ணறிவு ஓர் உதவி செய்யும் கருவியாக மட்டுமே, உரிய அதிகாரிகளின் முன்-அனுமதியுடன் பயன்படுத்தப்பட வேண்டும். முந்தைய தீர்ப்புகள், சட்ட மேற்கோள்கள் (Citations) சரிபார்த்தல், சட்ட ஆவணங்களைச் சுருக்குதல் ஆகிய சட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். நீதிமன்ற நடைமுறைகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ள ஏஐ உரையாடல் உதவியாளர்கள் (Chatbots) மூலம் வழிகாட்டலாம்.
குரல்-எழுத்து, எழுத்து-குரல் மாற்றம் / பிரெய்லி (Braille) வசதிகள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவை வழங்கலாம். தனிப்பட்ட அடையாளங்களை மறைத்தல் (Anonymisation), சம்மன் / நோட்டீஸ் தானியங்கி உருவாக்கம் போன்ற நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளலாம்.
தடைசெய்யப்பட்ட ஏஐ பயன்பாடுகள்
மனிதத் தலையீடு இன்றி வழக்கின் இறுதி முடிவை ஏஐ வழங்கக் கூடாது. தண்டனை தொடர்பான ஏஐ பகுப்பாய்வு ஆலோசனையாக மட்டுமே இருக்க வேண்டும்; மனிதக் கண்காணிப்பு கட்டாயம்.
ஒருவர் மீண்டும் குற்றம் செய்வாரா, பிணையில் தப்புவாரா, சாட்சி உண்மையா என்பதைக் கணிப்பதில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தக் கூடாது. அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் வழக்குகளில் விளக்கமளிக்க முடியாத ஏஐ கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது. நீதிமன்ற வளாகங்களில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மக்கள் ஆகியோரை ஏஐ மூலம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கக் கூடாது.