

விகாஷ் குமார் என்பவர் குடிமைப் பணித் தேர்வு எழுத விரும்பினார். நரம்பியல் சார்ந்த குறைபாடு (Writer’s Cramp) இருப்பதால் அவரால் தொடர்ச்சியாக வேகமாக எழுத முடியாது. எனவே, தேர்வு எழுதத் தனக்கு ஓர் உதவியாளர் (Scribe) வேண்டும் என்றும், கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (UPSC) அவர் அணுகினார். ஆனால், யுபிஎஸ்சி இதை ஏற்க மறுத்தது. “உங்களுக்கு 40% அல்லது அதற்கும் அதிகமான மாற்றுத்திறன் (Benchmark Disability) இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் இல்லை. எனவே, விதிகளின்படி உங்களுக்கு உதவியாளர் வழங்க முடியாது” என்று கூறியது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார்.
உண்மையில், அரசு வேலை அல்லது கல்வியில் இடஒதுக்கீடு பெறுவதற்கு 40% அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறன் என்கிற வரையறை தேவை. நியாயமான இணக்கத்துக்கு (Reasonable Accommodation) இந்தக் கணக்கு தேவையில்லை. ஒருவருக்குச் செயல்படுவதில் சிரமம் (Functional Limitation) இருந்தால் போதும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துதருவது அரசின் கடமை. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கும், நியாயமான இணக்கத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தியது. மாற்றுத்திறனாளிகளின் உரிமையில் இந்தத் தீர்ப்பு (2021) ஒரு மைல்கல்.