

உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு தீர்ப்பு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. குறைந்த கல்வித் தகுதிக்கான பணியில் சேர்வதற்காகத் தன்னுடைய உயர் கல்வித் தகுதியை மறைத்த ஒருவரின் பணிநீக்கத்தை உறுதிசெய்த நீதிமன்றம், ‘உண்மையான தகுதியை மறைத்து வேலை பெறுவது மற்றவர்களின் உரிமையைப் பறிக்கும் செயல்’ என்று கருத்து தெரிவித்திருந்தது.
சட்டரீதியாக இந்தக் கருத்து சரியானதாக இருந்தாலும், சமூகரீதியிலும் பொருளாதாரரீதியிலும் அது ஓர் ஆழமான கேள்வியை எழுப்புகிறது. பட்டதாரிகளும் பொறியாளர்களும் தங்களின் தகுதியை மறைத்து 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தகுதிக்கான பணிகளுக்குக்கூட விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏன் உருவாகியுள்ளது?
தகுதிக்கேற்ற வேலையின்மை
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு விநோதமான முரண்பாடு காணப்படுகிறது. ஒரு பக்கம் கல்வியறிவு உயர்கிறது. பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் மறுபக்கம் வேலையின்மை, தற்காலிக வேலைகள், ஒப்பந்தப் பணிகள், குறைந்த ஊதிய வேலைகள், இளைஞர்களின் விரக்தி போன்றவை அதிகரித்துவருகின்றன.
இன்றைய இந்தியாவில் வேலையின்மை என்பது வெறும் வேலையின்மை அல்ல. தகுதிக்கு ஏற்ற வேலையின்மை என்பதே மிகப்பெரிய பிரச்சினை. ஒரு பொறியாளர் உணவு விநியோக ஊழியராகவும், ஒரு முதுகலைப் பட்டதாரி செயலி அடிப்படையிலான வாகன ஓட்டுநராகவும், திறமையான இளைஞர்கள் தினக்கூலித் தொழிலாளர்களாகவும் பணியாற்றுவது இன்று சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது.
இவை அனைத்தும் கண்ணியமான தொழில்கள்தான். ஆனால், ஒருவர் தனது கல்வி, திறமை, கனவுகளுக்கு ஏற்ற வாய்ப்பைப் பெற முடியாமல் வெறும் வாழ்வாதாரத்துக்காக இவற்றைத் தேர்ந்தெடுப்பது ஒரு சமூகத் தோல்வியாகும். கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து அரசு வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.
ஆனால், பல அரசுத் துறைகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களைப் புறக்கணித்து தனித்தனியாக ஆள்சேர்ப்புகளை நடத்துகின்றன. அரசியல் மாற்றங்கள், நிர்வாகத் தாமதங்கள், நீதிமன்ற வழக்குகள், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவை வேலைவாய்ப்பு நடைமுறையைச் சிக்கலாக்குகின்றன. புதிய அரசு வந்தால் முந்தைய ஆட்சியின் ஆட்சேர்ப்பு முடிவுகள் நிறுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் நீதிமன்றங்களை நாடுகின்றன. வழக்குகள் பல ஆண்டுகளுக்கு நீள்கின்றன.