

இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருது அறிவித்த நாளிலிருந்தே சர்ச்சைகளும் வலுக்கத் தொடங்கிவிட்டன. இந்த ஞானபீட விருது அறிவிப்பு மேலும் சிலரையும் இழுத்துப் பொதுவெளியில் விட்டுள்ளது. அதில் முக்கியமானவர்கள் அகிலன், ஜெயகாந்தன் மற்றும் சுந்தர ராமசாமி.
முதல் இருவரும் தமிழில் ஏற்கெனவே ஞானபீட விருது பெற்றவர்கள். அகிலனுக்கு 1975ஆம் ஆண்டு ஞானபீட விருது அறிவித்தபோது அவரது எழுத்துச் செயல்பாடுகளுக்கு எதிராக, ‘போலி முகங்கள் - சந்தர்ப்பம்: ஞானபீடப் பரிசு’ (பிரக்ஞை, 1976) என்றொரு கட்டுரையைச் சுந்தர ராமசாமி எழுதினார். அந்தக் கட்டுரை மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர, ‘அகிலனின் சித்திரப்பாவை’ (1978) என்றொரு கட்டுரையையும் சு.ரா. எழுதியிருக்கிறார். ‘பொதுப்புத்தியைக்கூடப் பிடுங்கி எறிந்துவிட்டு ஆசிரியர் உருட்டி வைத்திருக்கும் ஒரு கோமாளிக் கதை இது’ என்று அந்நாவலை விமர்சனம் செய்திருக்கிறார்.