

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க இடைத்தேர்தலின் முடிவுகளைச் சில ஊடகங்கள் ‘நீல சுனாமி’ என்று வர்ணித்தன.
அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டது; எனினும், அதன் அடையாள நிறமோ சிவப்பு. தாராளவாதக் கொள்கையும் சிறிய இடதுசாரிச் சாய்வும் கொண்ட ஜனநாயகக் கட்சிக்கு நீல நிறம்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் (United States Congress) இரண்டு அவைகள்: மேலவை, கீழவை. இரண்டிலும் தங்களுக்கு இருந்த பெரும்பான்மையை ‘சிவப்பு’ இழந்தது.
‘நீலம்’ அதைக் கைப்பற்றியது. இதைத்தான் ஊடகங்கள் ‘நீல சுனாமி’ என்றன. இதை இடைத்தேர்தல் என்பதைவிட இடைக்காலத் தேர்தல் என்றழைப்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில், அமெரிக்க அதிபரின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள்.
இரண்டாவது ஆண்டின் முடிவில் இந்தத் தேர்தல் நடைபெறும். இப்போது குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டபோதிலும், டிரம்ப்பே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதிபராக நீடிப்பார். அமெரிக்காவில் அதிபருக்குத்தான் அதிகாரம் மிகுதி.
எனினும் அமெரிக்க நாடாளுமன்றத்தால் எல்லா ஆவணங்களையும் கேட்கவும் ஆராயவும் முடியும். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விசாரிக்க முடியும். நிதி ஒதுக்கீட்டைக் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் முடியும். இந்த மாற்றம் அமெரிக்காவைத் தாண்டி உலகெங்கும் பாதிப்புகளை உண்டாக்க வல்லது. இந்தச் சூழல் இந்தியாவுக்கு நன்மை பயக்குமா?
இந்தியாவுக்கான சேதி என்ன?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, பிரதமர் மோடியும் டிரம்ப்பும் நண்பர்கள். ஆகவே, இரு தரப்பு உறவு மேம்படும் என நம்பிக்கை நிலவியது. ஆனால், அப்படி நடக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் வணிகம், குடியேற்றம், அயலுறவு என எல்லாத் தளங்களிலும் நிலை தாழ்ந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது சீராகும் வாய்ப்பு இருக்கிறதா? அமெரிக்க வணிகம் இந்தியாவுக்கு முக்கியமானது. நமது ஏற்றுமதியில் 18% அமெரிக்காவுக்குத்தான் போகிறது. இதில்தான் டிரம்ப் கைவைத்தார். முதலில் இந்தியப் பொருள்களுக்குக் கட்டுப்படி ஆகாத அளவுக்கு இறக்குமதித் தீர்வையைக் கூட்டினார். பிறகு, ரஷ்ய எரிபொருளை வாங்குவதற்காக அபராதம் விதித்தார்.
இந்தத் தீர்வைகள் சட்ட விரோதமானவை என்று நீதிமன்றம் தடை விதித்தபோதும், வெவ்வேறு பிரிவுகளின்கீழ் அவர் விதிக்கும் தீர்வைகள் தொடர்கின்றன. கடந்த செப்டம்பர் 18 அன்று அமெரிக்க நாடாளுமன்றம் டிரம்ப்பிடம் ஓர் ஆயுதத்தைக் கையளித்தது.