

இன்றைய காலத்தில், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு, முந்தைய காலத்தைப் போல் சுமுகமாக இல்லை என்று பேசப்படுவதைப் பார்க்கிறோம்.
ஆசிரியர் - மாணவர் உறவில் சிக்கல்கள் உருவாகும்போது, சில மாணவர்கள் தீவிரமாகவும் எதிர்மறையாகவும் எதிர்வினையாற்றுவது உண்மைதான். இதை எதிர்கொள்வது எப்படி? மாணவர்களின் கடுமையான நடத்தைகளை பிரிட்டன் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும்போது, செயல்படுவதற்கான தெளிவான சட்ட அடிப்படை உள்ளது.
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பள்ளி ஊழியர்கள் நியாயமான அளவிலான உடல் வலிமையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளியின் ஒழுங்கைக் காப்பாற்ற, தேவையான - நியாயமான அளவில் தலையிட ஆசிரியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது மாணவர்களுக்கு உடல்ரீதியிலான தண்டனை (Corporal Punishment) வழங்குவதற்கான அனுமதி அல்ல.
ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக மாணவர்களின் உரிமைகளைப் பறிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆசிரியரின் நடவடிக்கை தேவையானதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ற அளவிலும் இருக்க வேண்டும் என்கிற வரையறையுடனேயே இச்சட்ட ஏற்பாடு செயல்படுத்தப்படுகிறது. பின்லாந்தில் பணியிடத்தில் வன்முறை அபாயத்தில் உள்ள பணியாளர்களைப் பாதுகாப்பதற்கு முக்கியமான ஏற்பாடுகள் உண்டு.
மாணவர்களின் நிலை
இருப்பினும், ஒரு நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களையும் அணுகுமுறைகளையும் மற்றொரு நாட்டின் சமூக, கல்விச் சூழலுக்கு அப்படியே பொருத்திவிட முடியாது. மாணவர்களின் நடத்தைப் பிரச்சினைகளின் பின்னணியைப் புரிந்துகொள்வதும் அவசியம். பல நேரம் மாணவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட புறக்காரணிகளும் இத்தகைய நடத்தைகளுக்குப் பின்னால் இருக்கின்றன.
குடும்பச் சிதைவுகளை எதிர்கொள்ளும் குழந்தைகள், தாய் அல்லது தந்தையின் அரவணைப்பின்மை, அடிப்படைத் தேவைகள் நிறைவேறாமை, குடும்ப வன்முறை, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் நடத்தைப் பிரச்சினைகளை வெளிப்படுத்தலாம். கற்றல் இடைவெளியும் நடத்தைப் பிரச்சினைகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எட்டாம் வகுப்புவரை முறையான கற்றல் அனுபவங்களைப் பெறாத மாணவர்கள், கற்றலுக்குத் தேவையான அடிப்படைத் திறன்களைப் பெற்றிராத மாணவர்கள், பதின்பருவத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பாடங்களையும் கற்றல் தேவைகளையும் எதிர்கொள்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.