

பருப்பு வகைப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்குக் கடைசியாக ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 2025 அக்டோபர் 1 அன்று, மத்திய அமைச்சரவை ‘பயறு உற்பத்தியில் தற்சார்பு இயக்கம்’ (Mission for Aatmanirbharta in Pulses) என்கிற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.11,440 கோடி முதலீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தற்போது சுமார் 250 லட்சம் டன்களாக இருக்கும் நாட்டின் பருப்பு உற்பத்தியை, இந்த இயக்கம் 350 லட்சம் டன்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஊட்டச்சத்துப் பாதுகாப்புக்கும் மண் ஆரோக்கியத்துக்கும் பருப்புப் பயிர்கள் சாகுபடி முக்கியமானது என்கிறபோதிலும், குறைந்த லாபம், குறைவான கொள்முதல் ஆதரவு காரணமாக இப்பயிர்கள் விவசாயிகளுக்குக் கவர்ச்சியற்றதாகவே இருக்கின்றன. இந்தப் புதிய உற்பத்தி இயக்கத்தால் இந்தியாவின் பருப்பு உற்பத்தியை உயர்த்த முடியுமா?
புறக்கணிக்கப்பட்ட பயிர்கள்: இந்தியாவில் பருப்பு வகை பயிரிடுதல் நீண்ட காலமாகப் பல வகைகளில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. 1960களின் நடுப்பகுதியில் அதிக மகசூல் தரும் கோதுமை, நெல் வகைகளின் அறிமுகம், இந்தியாவில் பயிர்ச் சாகுபடி முறையின் அடிப்படையையே மாற்றியது.
பசுமைப் புரட்சித் தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் நீர்ப்பாசனப் பகுதிகளுக்கும் தானியப் பயிர்களுக்கும் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதால், பருப்பு வகைகள் மானாவாரிப் பகுதிகளிலும், மோசமான உள்கட்டமைப்பு வசதி கொண்ட இடங்களிலுமே தொடர்ந்தன.
இதன் விளைவாக, 1960-61இல் 820 லட்சம் டன்களாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2024-25இல் 3,530 லட்சம் டன்களாக (நான்கு மடங்குக்கும் மேலாக) அதிகரித்தது. ஆனால், இதே காலக்கட்டத்தில் பருப்பு உற்பத்தி வெறும் 120 லட்சம் டன்னிலிருந்து 250 லட்சம் டன்னாக மட்டுமே அதிகரித்துள்ளது.
பருப்பு உற்பத்தியில் ஏற்பட்ட இந்த மெதுவான வளர்ச்சி, உற்பத்திக்கும் உள்நாட்டுத் தேவைக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்தது. இதைக் குறைக்க இறக்குமதியையே இந்தியா தொடர்ந்து நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.