

2025இல் உலகம் ஏராளமான அறிவியல் சாதனைகளைக் கண்டது. அவற்றில் சில உலகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவை. அதேவேளையில், அறிவியல் வளர்ச்சியின் பலன் அனைவருக்கும் சென்றுசேர்கிறதா என்னும் கேள்வியும் இந்த ஆண்டு கூர்மை அடைந்திருக்கிறது.
சூரியனை முத்தமிட்ட பார்க்கர்: நாசாவின் பார்க்கர் சோலார் புரோப் விண்கலம், 2024 டிசம்பர் 24 அன்று சூரியனின் அருகே நெருங்கிப் பறந்து சென்றது. இது சூரியனின் வளிமண்டலமான கரோனாவின் உள்ளே சென்று ஆய்வுகளை மேற்கொண்டது.
சுமார் 88 நாள்களுக்கு ஒரு முறை நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவரும் இந்த விண்கலம், 1,377 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கும் கார்பன் கவசத்தால் பாதுகாக்கப்படுகிறது.
சீனாவின் ஷாங்காய் ஒளியியல் நிறுவனம், ஒளியைப் பயன்படுத்தி இயங்கும் செயற்கை நுண்ணறிவுச் சில்லு (AI chip) ஒன்றை உருவாக்கியது. எலெக்ட்ரான்களுக்குப் பதிலாக ஃபோட்டான்களைப் பயன்படுத்தும் இந்தச் சில்லு, விநாடிக்கு 2,560 டெரா கணிப்புகளைச் செய்யும் திறன் கொண்டது. உலகத் தரம்வாய்ந்த என்விடியா சில்லுகளுக்கு மாற்றாக இது தகுதிவாய்ந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க விஞ்ஞானிகள், செல்லுக்குள் தற்காலிகமாக உருவாகும் ‘ஹெமிஃபியூசோம்’ என்னும் புதிய செல்லுறுப்பைக் கண்டறிந்துள்ளனர். செல்களுக்குள் புரதங்களை ஏந்திச்செல்லும் வெசிக்கிள்களுக்குள் பொருள்களை ஏற்றி இறக்கும் துறைமுகம் போலச் செயல்படும் இந்தச் செல்லுறுப்பு, தேவை முடிந்ததும் மறைந்துவிடுகிறது.
இந்த உறுப்பில் ஏற்படும் பிறழ்வுகள் அல்சைமர், புற்றுநோய், ஹெர்மன்ஸ்கி-புட்லக் நோய் போன்ற மரபணு சார்ந்த அரிய நோய்களுக்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.
விண்வெளித் திரைப்படம்: சிலேயில் உள்ள உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கேமரா கொண்ட வேரா சி. ரூபின் வான் நோக்குக்கூடம், 2025 ஜூனிலிருந்து செயல்பட்டு ஒளிப்படங்களை வெளியிட்டது.
இது அடுத்த 10 ஆண்டுகளில் தெற்கு வானத்தை முழுமையாகத் திரும்பத்திரும்பப் படம்பிடித்து, பிரபஞ்சத்தின் ஒரு ‘திரைப்படத்தை’ உருவாக்கும் திறன் கொண்டது. இருள் ஆற்றல், இருள் பருப்பொருள் ஆகியவற்றின் மர்மங்களைத் திறக்கும் ஒரு மாபெரும் தரவுக் களஞ்சியமாக இது அமையும்.