

தமிழ்ச் சொற்களில் மதிப்புக்குரிய சொல், வணக்கம். சொல்லுக்கு நிறை உண்டு. எடை உண்டு. ஆகவே சொல் என்பது ஒரு வகையான பொருளாக விளங்குகிறது. சொல்லுக்குள் பொருள் பொதிந்தும் இருக்கிறது. ஆகவேதான், தொல்காப்பியத்தில் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சொல்லும் இன்னொரு சொல்லுக்கு நிகர் இல்லை. நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதிலும் நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் சொல்லும் பதிலும் சமமில்லை. ஆனால், ஒரே ஒரு சொல் மட்டும் உங்களுக்கு நான் சொல்கிற பொழுதும் எனக்கு நீங்கள் சொல்கிற பொழுதும் சமமாகிறது. அந்தச் சொல் - ‘வணக்கம்’!
தமிழ்ச் சொற்களில் ஆழமான சொல் ஒன்று இருக்கிறது. அது ‘நன்றி’. இச்சொல் மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக உயரத்திலிருந்து எடுத்தாளப்படுவது வணக்கம். மிக ஆழத்திலிருந்து எடுத்தாளப்படுவது நன்றி. இவ்விரு சொற்களும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பயன்படுத்தப்படுவது பொங்கல் பண்டிகையின்போதுதான். தமிழில் ஆழமான இன்னொரு சொல் இருக்கிறது. அது எல். எல்லா, எல்லாம், எல்லாருக்கும் என்பது போன்ற சொற்களின் வேர்ச்சொல் ‘எல்’.