

‘ஒருங்கிணைந்த மருத்துவம்’ என்கிற சொல்லும் சிந்தனையும் எப்போதும் சர்ச்சைக்குள்ளாகும் விஷயமாகவே இருக்கிறது. ஒரு மருந்தின் மூலக்கூறுகள் பணியாற்றும் விதத்தில், அதன் அயனிகளின் ஈர்ப்பை ஏதேனும் ஒருவிதத்தில் அடுத்த துறை மருந்து சிதைத்துவிட்டால் என்னவாகும் என்கிற கேள்விகளும் இதன் பின்னணியில் உள்ளன.
நாள்படப் பயன்படுத்தப்பட்டு, தனியே எவ்வித நச்சுத்தன்மையும் இல்லை என நிரூபிக்கப்பட்ட மூலிகை மருந்தை, மிகத் துல்லியமாக அறியப்பட்ட ஒரு நவீன மருந்துடன் ஒருங்கே எப்படிப் பயன்படுத்த முடியும் என்பது இதில் முக்கியக் கேள்வி. ஆய்வுகள் போதாது என்பதுதான் இதன் அர்த்தம்.
ஆனால், அதற்கான கள ஆய்வும், மருந்தியல் ஆய்வும், நோயாளிகளின் மீதான ஆய்வும் நடத்துவது ஒன்றும் மிகக் கடினமான செயல் அல்ல. அதைச் செய்ய வேண்டிய களமும், ஆய்வு மருத்துவமனைக் கட்டமைப்பும், நவீன அடிப்படை மருத்துவப் புரிதல் கொண்ட அறிவுக்களமும் நவீனப் பெருமருத்துவ நிறுவனங்களும், அதற்கான நிதியும்கூட நவீன மருத்துவக் கூடாரத்தில்தான் உள்ளன. ஆனால், அப்படி ஒருங்கிணைய மறுக்கும் மனம் ஏராளமாக அங்கிருப்பதுதான் வேதனை.
முக்கியமான கட்டுரை அண்மையில், டாடா புற்றுநோய் மருத்துவமனை சார்பில் வெளியான ஆய்வுக் கட்டுரையும், அக்கட்டுரை மீது முன்வைக்கப்பட்ட விமர்சனமும் இதற்கு எடுத்துக்காட்டு.
புற்றுநோய் சிகிச்சையின் போது தற்காலிகமாக ரத்தத்தட்டணுக்கள் குறைபட்டு நிற்கையில், பப்பாளி இலைச்சாறு அதை அதிகரிக்கப் பயன்படுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்து, உலகின் மிகச்சிறந்த மருத்துவ ஆய்வு இதழில் (Journal of Clinical Oncology) மூத்த இந்தியப் புற்றுநோய் மருத்துவர்கள் பலர் இணைந்து வெளியிட்ட கட்டுரை அது.
பப்பாளி இலை ஆயுஷ் எனப்படும் இந்திய மருந்து அல்ல. மலேசிய / சீன அனுபவத்தில் வெளிவந்த ஒரு மரபு அனுபவ மருத்துவம். டெங்குக் காய்ச்சலில் ஏற்படும் ரத்தத்தட்டணுக்கள் குறைவுக்குப் பயன்பட்ட அனுபவத்தை, புற்றுநோயில் ரத்தத்தட்டுக் குறைபாட்டுக்கு அந்த ஆய்வு மருத்துவர் பயன்படுத்தினார்.
இம்மருந்து சிறப்பாகப் பலன் அளிப்பதாகவும், சிகிச்சைச் செலவு குறைவதாகவும் அதில் தெரியவந்தது. ஆனால், ஒரு சில அலோபதி மருத்துவர்கள் அந்த ஆய்வுக் கட்டுரையைப் படுமோசமாக விமர்சித்தனர். மரபு, மூலிகை எனச் சொன்னாலே, ‘அவை குப்பை... அவசியமற்றவை... தீங்கானவை’ என விலக்கும் போக்கு தொடரவே செய்கிறது.
காந்தியின் பார்வை
இந்தச் சிக்கலை யோசிக்கையில் மறைந்த டாக்டர் ஜீவா எழுதிய ‘மகாத்மாவும் மருத்துவமும்’ என்கிற நூல் நினைவுக்கு வந்தது. காந்தியின் நூற்றாண்டை ஒட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட ஆங்கில நூலைத் தழுவி ஜீவா எழுதிய நூல் அது. மகாத்மா ஒரு இயற்கை மருத்துவ விரும்பி என்பது அனைவரும் அறிந்த ஒன்று.