

இந்திய மருத்துவச் சங்கத்தின் மாதாந்திர இதழ் ஒன்றில் வந்துள்ள புள்ளிவிவரம் கவலையளிக்கிறது. இந்தியாவில் 25 – 30 வயதுக்கு உள்பட்ட மருத்துவர்களில் 52.3% பேருக்கு மதுப்பழக்கம் இருக்கிறது என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.
ஒரு மருத்துவரின் கையில் இருக்கும் ஸ்டெதஸ்கோப், ஒரு கருவி மட்டுமல்ல; அது பயனாளர் நம்பிக்கையின் அடையாளம். மருத்துவரைச் சந்திக்கும் ஒவ்வொரு பயனாளியும், ‘இவர் என்னைக் குணப்படுத்துவார்’ என்னும் நம்பிக்கையுடன்தான் அவரிடம் வருகிறார்கள். அந்த நம்பிக்கையைத் தாங்கி நிற்கும் மருத்துவரின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம்தானே!
தெளிவான சிந்தனை
மருத்துவத்தில் ஒவ்வொரு நோயும் தனித்தன்மை கொண்டது. பயனாளியின் அறிகுறிகள், பரிசோதனை முடிவுகள், மருத்துவ வரலாறு எனப் பல தகவல்களை இணைத்துத்தான் சரியான நோயறிதலுக்கும் சிகிச்சைக்கும் வர முடியும்.
இதற்குத் தெளிவான சிந்தனையும் கூர்மையான பகுத்தறிவும் முடிவெடுக்கும் திறனும் தேவை. குறிப்பாக, அறுவைசிகிச்சையின்போது கைகளின் கட்டுப்பாடும் துல்லியமும் மிகவும் அவசியம்.
சில மில்லிமீட்டர் அளவிலான தவறுகள்கூட எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம். மருத்துவரின் கவனம், உடல் ஒருங்கிணைப்பு, எதிர்வினை வேகம், பயனாளியின் அவசரநிலையில் சரியான முடிவெடுத்தல் ஆகியவற்றை மதுவின் தாக்கம் பாதிக்கக்கூடும். எனவே, மருத்துவப் பணியில் ஈடுபடும்போது முழுமையான விழிப்புடனும் தெளிவுடனும் இருப்பது இன்றியமையாதது.
மதுவின் மறைமுகப் பாதிப்புகள்
மது அருந்திய உடனே ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, தொடர்ந்து மது அருந்துவதால் ஏற்படும் நீண்ட கால விளைவுகளும் கவனிக்கப்பட வேண்டியவை. கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம், இதயப் பாதிப்புகள், சில வகைப் புற்றுநோய்கள், நினைவாற்றல் குறைபாடு, மனநலப் பிரச்சினைகள் எனப் பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுடன் மது தொடர்புடையது.
தூக்கத்தின் தரத்தையும் அது பாதிக்கக்கூடும். மேலும், மருத்துவர்களின் பணி நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நள்ளிரவில் அவசர அழைப்பு வரலாம்; விடியற்காலையில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்.
இத்தகைய சூழலில், எந்த நேரத்திலும் அவர்கள் பணிக்குச் செல்லத் தயாராக இருப்பது அவசியம். குறிப்பாக, மது அருந்திய நிலையில் சிகிச்சை அளிப்பது பயனாளிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.