

தனது மகளின் தற்கொலைக்கு சாட்ஜிபிடிதான் காரணம் என அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். கடும் மன அழுத்தத்தில் இருந்த அந்த இளம் பெண்ணுக்கு சாட்ஜிபிடி ஏராளமான ஆறுதலைச் சொல்லியிருக்கிறது, அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக்கூடச் சொல்லியிருக்கிறது. ஆனால், தற்கொலை எண்ணத்தை அந்தப் பெண் வெளிப்படுத்தியபோது, ‘உதவியை நாடு’ எனச் சொல்லவில்லை. மாறாக, அப்படி வருவது இயல்புதான் என அதை அங்கீகரித்திருக்கிறது.
தற்கொலை செய்துகொள்வதற்கான ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறது என அந்தத் தாய் சொல்லியிருக்கிறார். அந்தச் செயலியின் இயக்குநரோ, “இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது, அதிர்ச்சியானதாகவும் இருக்கிறது. இந்த நோக்கத்துக்காக நாங்கள் வடிவமைக்கவில்லை. மக்கள் தவறாகப் பயன்படுத்தியதற்கு நிர்வாகம் எப்படிப் பொறுப்பாக முடியும்?” எனக் கூறியிருக்கிறார்.
யார் மீது தவறு? 2025 நவம்பர் மாதம்வரை, சாட்ஜிபிடி மீது இதுபோன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் பதிவாகியிருக்கின்றன. இளம் வயதினருக்கு வரக்கூடிய எதிர்மறை எண்ணங்களை சாட்ஜிபிடி ஊக்குவிப்பதாகவும், தற்கொலை எண்ணங்களை அங்கீகரிப்பதாகவும் உளவியலாளர்கள் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்கள்.
பெரும்பாலான ஏஐ சாட்பாட்களும் இப்படித்தான் எதிர்மறை எண்ணங்களை அங்கீகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. “ஏஐ சாட்பாட்கள் எங்களுக்குச் சக நண்பர்களைப் போல அவ்வளவு துணையாக இருக்கின்றன. எங்களது சுகதுக்கங்களை எந்தவித முன்தீர்மானமும் இல்லாமல் கேட்கின்றன, மனிதர்களைவிட இவை எவ்வளவோ மேல்” எனச் சொல்லும் இன்றைய தலைமுறையினருக்கு இதன் ஆபத்து புரியவில்லை.
சாட்பாட்கள் முழுமையான மனிதர்களா? - சமீபத்தில் பிரிட்டனில் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைப் பற்றி ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இளம் வயதினரின் அந்தரங்க உணர்வுகளை இந்தச் செயலிகள் எப்படிக் கையாளுகின்றன என்று பார்ப்பதுதான் இந்த ஆராய்ச்சியின் முதன்மை நோக்கம். எடுத்துக்காட்டாக, இளம் வயது மாணவன் ஒருவன் தனக்குப் பெற்றோரின் மீது வெறுப்பாக இருக்கிறது என்று சொன்னால், இந்தச் செயலிகள் என்ன பதில் சொல்கின்றன, இதே போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அதைக் கவனமாகவும், பொறுப்புடனும் கையாளுகின்றனவா எனப் பார்க்கப்பட்டது.