

அனுபவமும் அறத்தின் விழுமியங்களும் நிறைந்திருக்கும் ஆளுமைகளைச் சந்திக்கும்போது, சமூகத்தின் மீதான நமது கண்ணோட்டத்தில் ஒரு புதிய வெளிச்சம் படர்வதை உணர முடியும். சில நாள்களுக்கு முன் மதுரையில் அப்படி ஒரு மாமனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
100 வயதைக் கடந்தும் துடிப்போடு இயங்கிவரும் சுதந்திரப் போராட்டத் தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்க்கையை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்ட, ‘சுவடுகளைத் தேடி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா அது.
மதுரைக் கல்லூரி ஒன்றில் ஏராளமான மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற அந்நிகழ்வு, இன்றைக்குச் சமூகம் செல்லும் போக்கை மாற்ற நினைப்பவர்களுக்கான உத்வேகத்தைத் தரும் வகையில் அமைந்தது.
ஆட்சியராக உயர்ந்த போராளி
தனது 16ஆம் வயதில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்ட லட்சுமிகாந்தன் பாரதி, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க மறுத்ததால் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை பெற்றவர். இதன் காரணமாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.
சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் மூதறிஞர் ராஜாஜியின் சிபாரிசின் பேரில் மதுரைக் கல்லூரியில் (The Madura College) பட்டப் படிப்பைத் தொடர்ந்தார்; தனது அறிவாற்றல், தளராத உழைப்பின் மூலம் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகவும் உயர்ந்தார்.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் தான் சிறை வைக்கப்பட்டிருந்த அதே மாவட்டத்துக்கு (மதுரை) ஆட்சித் தலைவராகப் பணியாற்றிய சாதனையை நிகழ்த்தினார்.
அரசுப் பணிக் காலத்தை நிறைவு செய்த பின்னரும், பல்வேறு சமூகப் பணிகளில் இன்றுவரை தன்னை ஈடுபடுத்திக் கொண்டுவருகிறார் லட்சுமிகாந்தன் பாரதி. பள்ளி, கல்லூரி இளைஞர்களிடையே சென்று பேசிவருகிறார்.