

ஐரோப்பியர்களால் எழுதப்பட்ட இந்திய வரலாறு மத அடிப்படையில் அணுகப்பட்டது என்னும் விமர்சனம் உண்டு. இந்தக் காலனியக் கண்ணோட்டம் இந்திய தேசிய வரலாற்று ஆய்வாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் மதம், சாதி, மொழி, இனம் உள்ளிட்ட குழுவாதப் பார்வையில் வரலாறு எழுதப்பட்டதாக விமர்சிக்கப்படுகிறது.
அதிகாரவர்க்கக் கண்ணோட்டத்தில் இந்திய வரலாற்றை அரசியலாகக் குறுக்கியதே இதற்குக் காரணம். இக்கண்ணோட்டத்துக்கு நேர்மாறாக, மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்கள் அரசியல் பொருளாதாரப் பின்புலத்தில் சமூகப் பண்பாட்டு உள்ளீடுகளையும் கணக்கில் கொண்டனர்.
இவர்களிலும் பெரும்பாலானோர் இந்தியாவின் அரசியல் பொருளாதாரச் சிக்கல்களிலேயே கவனம் செலுத்தினர். ஒருசிலரே இந்தியப் பண்பாட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் கே.என்.பணிக்கர். வரலாற்றை எழுதுவதில் மார்க்சிய அணுகுமுறையைப் பின்பற்றிய பணிக்கர், மதச்சார்பற்ற வரலாற்றை எழுதுவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர்.
பன்முக ஆளுமை
மதராஸ் மாகாணம், மலபார் மாவட்டம் குருவாயூரில் 1936 ஏப்ரல் 26 அன்று பணிக்கர் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டம் உக்கிரமாக இருந்த காலக்கட்டத்தில் இளமைக் காலத்தைக் கழித்த அவர், சாவக்காடு வாரிய உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் இளங்கலையையும், ராஜஸ்தான் மாநிலத்தில் முதுகலையையும் பயின்றார். டெல்லி பல்கலைக்கழகத்தின் முக்கிய உறுப்புக் கல்லூரியான இந்துக் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.
பின் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 1972ஆம் ஆண்டு முதல் 28 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
கேரள வரலாற்றுப் பேரவையின் (Kerala History Congress) நிறுவனத் தலைவராகவும், இந்திய வரலாற்றுப் பேரவையின் (Indian History Congress) தலைவராகவும் செயல்பட்டார். கற்பித்தல் பணிக்கு அப்பாற்பட்டு துணைவேந்தர் உள்படச் சில முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் வரலாற்றுத் துறையில் ரொமிலா தாப்பர் உள்ளிட்டவர்கள் அத்துறையை உலகத் தரத்துக்கு இணையாக மாற்றினர். இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகமாக உருவானதில் பணிக்கருக்கும் முக்கியப் பங்கு உண்டு.