

2025இல், இந்தியப் பொருளாதாரம் இரண்டு எதிரெதிர் சக்திகளின் தாக்கத்துடன் ஒரு சவாலான கட்டத்தில் உள்ளது. ஒருபுறம், வலுவான உள்நாட்டுத் தேவையால் எழும் பொருளாதார வளர்ச்சி; மறுபுறம், நிச்சயமற்ற உலகப் பொருளாதாரம், சிக்கலான உலக அரசியல் சூழலின் பாதகமான தாக்கம் போன்ற காரணிகள் உள்ளன.
இந்தப் பின்னணியில், இந்தியப் பொருளாதாரம் 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (real GDP) அடிப்படையில் 8.2% வளர்ச்சியைக் கண்டுள்ளது. இருண்ட உலகப் பொருளாதாரக் கண்ணோட்டங்களுக்கு மத்தியில், நிலையான இந்தப் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கை தரும் வகையில் அமைந்துள்ளது.
முக்கிய வளர்ச்சி அம்சங்கள்: 2020களின் தொடக்கத்தில் பெரும் பாதிப்பைத் தந்த கரோனா பெருந்தொற்று போன்ற இடையூறுகளிலிருந்து மீண்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிப்பட்ட மீட்சியைத் தொடர்ந்து 2025இல் இந்தியாவின் உண்மை ஜிடிபி வளர்ச்சியானது, தொடர்ந்து 5-6 சதவீதத்துக்கு மேல் நிலைத்திருக்கிறது. இது இந்தியப் பொருளாதாரத்தின் உறுதித்தன்மையைக் காட்டுகிறது.
இந்தத் தொடர் வளர்ச்சியானது, உள்நாட்டுத் தேவையில் ஏற்பட்டுள்ள முதிர்ச்சியைக் காட்டுகிறது. அதிகரித்துவரும் நகரமயமாக்கல், விரிவடையும் நடுத்தரவர்க்க வருமானங்கள், விரைவான டிஜிட்டல்மயமாக்கல் ஆகியவை தனியார் நுகர்வை நிலைப்படுத்தியுள்ளன. அதேநேரத்தில், அரசுப் பொது முதலீடு - குறிப்பாக போக்குவரத்து, இடப்பெயர்ச்சி, எரிசக்தி உள்கட்டமைப்பு போன்றவை பொருளாதாரத்தை வலுப்படுத்திவருகின்றன.
பொருளாதார நோக்கில் உற்பத்தித் துறை (Manufacturing) மைய இடத்தைப் பிடித்துள்ளது. மின்னணுக் கருவிகள், மருந்து தயாரிப்பு, மின் வாகனங்கள், சூரிய மின் ஆற்றல், ஜவுளி, செமிகண்டக்டர் போன்ற துறைகளில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் (PLI schemes) கணிசமான முன்னேற்றத்தைக் காணத் தொடங்கியுள்ளன.