அதிகரிக்கும் ஆலை விபத்துகள் | சொல்... பொருள்... தெளிவு

தொழிலாளர் பாதுகாப்பில் குறைபாடுகள் இன்றும் தொடர்கின்றன
அதிகரிக்கும் ஆலை விபத்துகள் | சொல்... பொருள்... தெளிவு
Updated on
2 min read

கடந்த ஜூன் 7 அன்று குஜராத்தின் சூரத் நகரில் ஓர் ஆலையில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நான்கு பேர் நச்சுவாயு தாக்கி உயிரிழந்தனர். மறுநாள் (ஜூன் 8) விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் கொள்கலன் வெடித்துச் சிதறியதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டனவா, ஒப்பந்தப் பணியாளர்கள் இருப்பு முறையாகப் பேணப்பட்டதா என்கிற கேள்விகளை இந்த இரண்டு சம்பவங்களும் எழுப்புகின்றன.

பணியாளர் பாதுகாப்பு

சம்பவம் 1: சூரத்தின் அஸ்வினிகுமார் பகுதியில் நகைகள் செய்யும் இடம் ஒன்றில், கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பணியாளருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆபத்துக்குள்ளான நிலையில், அவரைக் காப்பாற்ற மற்ற இரண்டு பணியாளர்களும் அவர்களின் கண்காணிப்பாளரும் முயன்றனர்.

ஆனால், நால்வரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். முன்னதாக, நிலைமையை உணர்ந்த கண்காணிப்பாளர்தான் சம்பவம் பற்றித் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்திருந்தார். விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்புக் கருவிகள் ஏதுமில்லை. பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அண்மைக்காலமாக சூரத்தில் இதே போன்ற முறையில் உயிரிழப்புகள் தொடர்ச்சியாகப் பதிவாகிவருகின்றன.

சம்பவம் 2: விசாகப்பட்டினம் ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் லிமிடெட்டின் (RINL) எஃகு உருக்கும் பிரிவு 1இல் விபத்து நேரிட்டதில் 10 பேர் இறந்ததுடன் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

இதையடுத்து, 22 பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்கான நிதியுதவி உள்ளிட்டவை மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விசாரணை மேற்கொள்ள நிபுணர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

2012இல் இதே எஃகு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். அப்போதும், இதே போன்ற நிர்வாகரீதியிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பணியிடங்களில் விபத்துகளைத் தடுப்பதற்குத் தேவையான நிறுவனரீதியிலான வழிமுறைகளை வரையறுப்பதில் இந்தியாவில் நிலவும் பற்றாக்குறை நிலைமையை இது வெளிக்காட்டுகிறது.

பணியாளர்கள் எண்ணிக்கை குறைப்பு, அதிகப் பணிச்சுமை, நாள்பட்ட இயந்திரங்கள், ஒத்திவைக்கப்பட்ட பராமரிப்புப் பணிகள், ஒப்பந்தத் தொழிலாளர்களைச் சார்ந்திருத்தல் அதிகரிப்பு ஆகியவற்றை விசாகப்பட்டினம் ஆலையில் நிலவிய பிரச்சினைகளாகத் தொழிற்சங்கத்தினரும் முன்னாள் பணியாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

தரமற்ற மூலப்பொருள்கள், உற்பத்தியை அதிகரித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளிட்டவையும் விபத்துக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. இந்த எஃகு ஆலையைத் தனியார்மயப்படுத்தும் வகையில் மத்திய அரசு தனது பங்குகளைத் திரும்பப்பெறுகிற முடிவைச் செயல்படுத்தியதும், முதலீடுகள் குறைந்ததால் ஏற்பட்ட சிரமங்களை ஆலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததும் பிற காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.

ஒப்பந்தப் பணியாளர்கள் நிலை

நிறுவனரீதியிலான பலவீனங்கள் அதிகரிக்கும் போதுதான் பெரிய ஆலைகளில் பெரும்பாலும் விபத்துகள் நிகழ்கின்றன. இவ்விரு விபத்துகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இழப்புக்கு உள்ளாகியிருப்பது பொதுவான அம்சமாக இருப்பது தற்செயலானது அல்ல.

ஒப்பீடு அடிப்படையில், நிரந்தரப் பணியாளர்களைவிட அதிக ஆபத்தான பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவது பணியிடப் பாதுகாப்பு சார்ந்த ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

குறைந்த பயிற்சி, அமைப்பாகத் திரள முடியாத நிலைமை உள்ளிட்டவற்றை ஒப்பந்தத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவருவது இவ்விபத்துகளில் தெளிவாகத் தெரிகிறது. பணியாளர் பற்றாக்குறை, ஆபத்தான பணிகளில் சாதி, வர்க்க அடிப்படையில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுதல், நிதி நெருக்கடிக்கு உள்ளான நிறுவனங்களில் பணியாளர் பாதுகாப்பைவிட மற்ற செலவுகளுக்கு முக்கியத்துவம் தருவது ஆகியனவும் முக்கியக் காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.

பெரும்பாலான ஆலைகளில் பணியாளர் எண்ணிக்கைக்கு ஏற்பப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்படுவது இல்லை. அமைப்புரீதியாகத் திரள்கிற சாத்தியங்களை நிரந்தரப் பணியாளர்கள் கொண்டிருப்பதால், அதை முன்வைத்தே பல இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

இன்னொரு புறம், இந்தியாவில் புதிய தொழில்சார் பாதுகாப்பு நடைமுறைகள் (Occupational Safety Framework) சீரற்ற வகையிலும் படிப்படியாகவும் செயல்படுத்தப்படுகிற நிலையில், இந்த விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இதுபோன்ற விபத்துகளைப் பதிவுசெய்வதில் இருக்கிற குறைகளும் தற்போது பூதாகரமாகி வருகின்றன.

போதுமான கண்காணிப்பு இல்லாமை

தொழிலாளர் பாதுகாப்புத் தரவுகளைத் திரட்டும் தொடக்க நிலையிலேயே பிரச்சினைகள் தொடங்குகின்றன; ஆலை ஆலோசனை சேவை, தொழில் நிறுவனங்களுக்கான தலைமை இயக்குநரகத்தின் (DGFASLI) வருடாந்திர நிலையான விளக்கக் குறிப்புகளில் (SRNs) இருக்கிற இடைவெளி இதை வெளிப்படுத்துகிறது.

பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம், பணிச்சூழல் (OSH) நெறிமுறைகள் 2020-ஐச் செயல்படுத்த இந்த இயக்குநரகம் உதவிய நிலையில், மேற்சொன்ன விதிகள் கடந்த மாதம்தான் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, இயக்குநரகத்தின் பெயரானது பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தலைமை இயக்குநரகம் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

நிலையான விளக்கக் குறிப்பு ஆவணங்களில் ஆலை விபத்துகள் இரண்டு பிரிவுகளில் பதிவு செய்யப்படுகின்றன. தொழிலாளர் பணியகம், ஆலைகளுக்கான தலைமை ஆய்வாளர்களிடம் இருந்து டிஜிஎஃப்ஏஎஸ்எல்ஐ திரட்டுபவை என இந்த இரு வேறு தரவுகளும் ஒருபோதும் பொருந்திப்போவதே இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் ஆலைகளில் தீ விபத்துகளால் உயிரிழந்தோர், காயமடைந்தோர் குறித்த இந்த இரண்டு தரவுகளிலும் வித்தியாசம் உள்ளது; அதேநேரத்தில், இந்திய விபத்து மரணங்கள் - தற்கொலைகள் (ADSI) அறிக்கையில் உள்ள எண்ணிக்கையில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே இவை இரண்டிலும் இருப்பது இன்னொரு முரண்.

தேசிய அளவில் ஆலை ஆய்வாளர்கள் குறைவாக இருப்பதால் அவர்கள் கண்காணிக்கிற ஆலைகளும் கணிசமாகக் குறைந்தது, அவற்றின் பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது.

தேசிய அளவில் தொழில் துறைப் பாதுகாப்பு ஆணையம் போன்ற ஓர் அமைப்பை நிறுவுதல், தொழில்நுட்பரீதியிலான கண்காணிப்பை வலுப்படுத்துதல், சீரான பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல், பணியாளர் பயிற்சி / பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துதல், ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பாதுகாத்தல், அவசரகாலத் தயார்நிலை / மீட்பு நடவடிக்கைகளைத் தரம் உயர்த்துதல் எனப் பல அம்சங்களின் வழியே ஆலை விபத்துகளால் தொழிலாளர்கள் நசிவதைப் பெருமளவில் தடுக்க முடியும்.

அதிகரிக்கும் ஆலை விபத்துகள் | சொல்... பொருள்... தெளிவு
ஸ்பெயின் அணியை கதறவிட்ட வோசின்ஹா | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in