என் சரஸ்வதி, என் காளி | இடம் பொருள் மனிதர் 1

Updated on: 
3 min read

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இன்றி வாழ்ந்த எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி. வங்க நவீன இலக்கியத்தில் ஆஷாபூர்ணா தேவிக்குப் பின்னர் கொண்டாடப்பட்ட இலக்கியவாதி; அன்னை தெரசாவுக்குப் பின்னர் போற்றப்பட்ட சமூகப் போராளியும்கூட. இந்த இரண்டு செயல்பாடுகளும் அவரிடம் ஒன்றுக்கொன்று துணையாக வினையாற்றின. இதயத்திலிருந்து பிறக்காத ஒரு சொல்லைக்கூட அவர் எழுதியதில்லை. அந்த இதயமும் அவரது சமூகச் செயல்பாடுகளால் துடிப்பு பெற்றிருந்தது.

உரிமை கோரும் எழுத்து: ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையே மகாஸ்வேதா தேவியினுடைய எழுத்தின் ஆதாரம். வரலாறு எழுதப்பட்ட காலம் முதலே உரிமை மறுக்கப்பட்ட பெண்கள், சமூக நீதிக்காகப் போராடியவர்கள் உள்ளிட்ட பொதுச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைப்பாடுகளே அவரது இலக்கியப் பேசுபொருள்கள். பழங்குடியினரின் வாழ்க்கையை அவர் அளவுக்கு எழுத்தில் கொண்டுவந்தவர்கள் அநேகமாக எவரும் இல்லை. மேற்சொன்ன பேசப்படாத வாழ்க்கைகளை எழுத்தில் சித்தரித்தது மட்டுமல்ல, அவை மேம்படவும் உரிமை பெறவும் செயல்பட்டார் என்பதே அவரது தனித்துவம்.

பிரிவினைக்கு முந்தைய வங்காளத்தின் டாக்காவில் பிறந்தவர் மகாஸ்வேதா தேவி. கலையும் இலக்கியமும் அன்றாடப் புழக்கத்திலிருந்த குடும்பத்தின் வாரிசு. தந்தை மனீஷ் கட்டக் புகழ்பெற்ற கவிஞர். தாய் தாரித்ரி தேவி சமூகச் செயல்பாட்டாளர். மகாகவி தாகூரின் நிழலில் சாந்திநிகேதனில் மகாஸ்வேதா கல்வி பயின்றார்.

நாட்டின் விடுதலையை ஒட்டிய பிரிவினை, பின்னர் எழுந்த சமூகக் கொந்தளிப்புகள், பஞ்சம், விவசாயிகளின் உரிமைப் போராட்டம், விடுதலைக்குப் பின்னர் நிகழ்ந்த ஒடுக்குமுறைகள் – இவை அனைத்தும் அவரைத் தீவிரமாகப் பாதித்தன. பொதுவுடைமைச் சார்பாளர் ஆக்கின. தபால் தந்தித் துறையில் எழுத்தராக வேலைக்கு அமர்ந்த சில நாள்களிலேயே அவரது பொதுவுடைமைச் சார்பின் காரணமாக வேலைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், வெவ்வெறு வேலைகளில் ஈடுபட்டார். அதில் ஒன்று, அமெரிக்காவுக்குக் குரங்குகளை அனுப்பும் ஏற்றுமதியாளர் வேலை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in