

வரைபடத்தில் மெலிசா சூறாவளி
கரீபியப் பகுதியில் கியூபா, டொமினிக்கன் குடியரசு, ஹேய்ட்டி, ஜமைக்கா போன்ற தீவு நாடுகளை உருக்குலைத்த மெலிசா சூறாவளி 600 கோடி டாலர் சேதத்தை விளைவித்து 83 பேரின் உயிரையும் குடித்தது. 295 கிலோமீட்டர் அசுர வேகத்தில் சுழன்று வீசிய மெலிசா, 1900களில் இருந்து பதிவான சூறாவளிகளில் - அட்லாண்டிக் பகுதியைத் தாக்கிய - மூன்றாவது ஆற்றல்வாய்ந்த சூறாவளி. இதன் புயல்-வேகக் காற்று அதன் மையத்தில் இருந்து 70 கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பரவியிருந்தது; எனவே, கூடுதல் பகுதிகளைத் தாக்கி அழித்தது.
பசுத்தோல் போர்த்திய புலி: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் முதல் நவம்பர்வரை அட்லாண்டிக் சூறாவளிக் காலம். இந்தக் காலக்கட்டத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 14 புயல்கள் உருவாகின்றன. இவற்றில், ஏழு சூறாவளிகளாகவும், மூன்று அதிதீவிரச் சூறாவளிகளாகவும் உருமாறுகின்றன. எனவே, மெலிசா போன்ற புயலின் ஆரம்ப உருவாக்கம் முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல.