

ஐரோப்பிய நாடுகளில், 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் பொதுப் போக்குவரத்துகளில் பயணிப்பவர்கள் அனைவரின் கைகளிலும் கண்டிப்பாகப் புத்தகம் அல்லது அன்றைய நாளிதழ் இருக்கும். நாளிதழ்கள் இலவசமாக வழங்கப்படும். அவரவர் படித்துவிட்டு ரயிலில் அடுத்தவர் படிப்பதற்காக வைத்து விட்டுச் செல்வார்கள். அந்தச் சூழல்கள் மாறி விட்டன. இன்றைக்கு எல்லோர் கைகளிலும் கைப்பேசி இருக்கிறது. அதனை சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், செய்திகள் படிப்பது, காணொளிகள் காண்பது என ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதைக் காண்கிறோம்.
அச்சு எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து கடந்த 500 ஆண்டுகளாக நம்முடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாக விளங்கியவை புத்தகங்கள்தான். அறிவை ஜனநாயகப்படுத்திய அந்தப் புத்தகங்களின் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வியும், கவலையும் பரவலாக நிலவுகிறது.