

நவீன உலகின் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை (Information Technology) திகழ்கிறது. இருப்பினும், 2025ஆம் ஆண்டு ஜூலை முதல் 2026 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI), தானியங்கிச் செயல்பாடுகளின் அதீத வளர்ச்சியால் ஐடி துறை பெரும் சரிவை எதிர்கொண்டுவருகிறது.
இந்தியாவில் மட்டும் இக்காலக்கட்டத்தில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ‘அமைதியான பணிநீக்கம்’, ‘கட்டாய ராஜினாமா’ மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர். பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, தொழிலாளர் நலச் சட்டங்களைக் காற்றில் பறக்கவிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கவலைதரும் புள்ளிவிவரங்கள்
‘லேஆஃப்ஸ்’ (Layoffs.fyi) இணையதளத் தரவுகளின்படி, ஐடி துறையில் நிலவும் பணிநீக்க அலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. 2025ஆம் ஆண்டு 271 ஐடி நிறுவனங்கள் 1,24,201 ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கியுள்ளன. 2026இல் இதுவரை 45 தொழில்நுட்ப நிறுவனங்கள் 29,570 ஊழியர்களை நீக்கியுள்ளன.
அதாவது, 2026இன் தொடக்கத்திலேயே கிட்டத்தட்ட 30,000 பணியிடங்கள் பறிபோயுள்ளன. இது வெறும் பொருளாதாரச் சரிவு மட்டுமல்ல, மனித உழைப்புக்குப் பதிலாகச் செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்வதால், ஜூன் 2025 முதல் மார்ச் 2026 வரைக்கும் ஆள் குறைப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் ஐடி சேவைத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் செலவினங்களைக் குறைப்பதாகக் காரணம் காட்டி, ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. டிசிஎஸ் நிறுவனம், 2025 நிதியாண்டின் இறுதியில் அதன் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான குறைப்பைக் கண்டுள்ளது.
திறன் அடிப்படையில் 5,000 முதல் 7,000 பணியாளர்கள்வரை வெளியேற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதாகக் கூறி, 2,500 ஊழியர்களை டெக் மஹிந்திரா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.