

மிக வேகமாக வளரும் இந்தியப் பெருநகரங்களில் ஒன்றான சென்னை, உயர்ந்த கட்டிடங்கள், சிறந்த தொழில்நுட்பப் பூங்காக்கள், தரமான உற்பத்தி மையங்கள் என ஏராளமான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கிறது.
எனினும், நகரத்தின் தலைக்கு மேல் ஒரு சிலந்தி வலையைப் போலப் பின்னிக்கிடக்கும் மின்சாரம் - தொலைபேசி - இணையம் - கேபிள் டிவி கம்பிகள் நகரின் அழகைக் கெடுப்பதுடன், அன்றாட விபத்துகள், அத்தியாவசிய சேவைகளின் சீர்குலைவு போன்றவற்றுக்குக் காரணமாக இருக்கின்றன. ஒட்டுமொத்த நகர வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக உள்ளன.
கம்பிகளின் சங்கமம்: சென்னையின் முக்கியச் சாலைகள், குறுகிய சந்துகள், நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் இது ஒரு பிரச்சினையாகவே தொடர்கிறது. ஒரே மின்கம்பத்தில் பயன்பாட்டில் உள்ளவை, பழுதடைந்தவை, துண்டிக்கப்பட்டவை என 100க்கும் மேற்பட்ட கேபிள்கள் தொங்குகின்றன. இதில் எது இணையக் கம்பி, எது தகவல் தொடர்புக் கம்பி என்பதைக் கண்டறிவது சேவை ஊழியர்களுக்கே சவாலான விஷயம்.
மின்கம்பங்கள், மரங்கள், வேலிகள், பாலங்களின் தூண்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் இரும்புத் தூண்கள் என எங்கு கிடைத்தாலும், அங்கு கம்பிகளைச் சுற்றிப் போடுவது ஒரு வழக்கமாகிவிட்டது.
இந்தக் கம்பிகளின் பாரம் தாங்காமல் மின்கம்பங்கள் ஒருபுறம் சாய்ந்து நிற்பதும் சில இடங்களில் அவை கீழே விழுந்து சாலைகளை மறிப்பதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் சாதாரணமாகிவிட்டன. மழைக் காலங்களில் மின்கம்பிகள் உரசுவதாலோ, அறுந்து விழுவதாலோ ஏற்படும் மின்கசிவினால் விபத்துகள், உயிரிழப்புகள் நேரிடுகின்றன.
வேகமான இணையம், தடையற்ற தொலைபேசி சேவை, தெளிவான கேபிள் டிவி என அனைத்தும் நவீன வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள்தான். ஆனால், இந்தக் கம்பிகளுக்கு இடையிலான சிக்கல்கள் இந்தச் சேவைகளின் தரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன.
பல்வேறு சேவை வழங்குநர்கள் ஒரே கம்பத்தைப் பயன்படுத்துவதால், ஒரு கம்பி அறுந்து விழுந்தால், அது எந்த நிறுவனத்தைச் சார்ந்தது என்பதை அடையாளம் காண்பதே சிக்கலாகி, பல சேவைகளையும் ஒரே நேரத்தில் முடக்கிவிடுகிறது.