

மே 13 அன்று பெய்ஜிங் நகரின் மக்கள் மாமன்றத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்றார் சீன அதிபர் ஷி ஜின் பிங். ‘இந்தச் சந்திப்பை உலகமே உற்றுநோக்குகிறது’ என்றார் ஷி. அது உண்மைதான். உலகின் ஆகப் பெரிய பொருளாதாரங்களை வழிநடத்தும் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு, பன்னாட்டுக் கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை.
டிரம்ப் சில வாரங்கள் முன்பாகவே இந்தச் சந்திப்புக்குத் தயாராகிவிட்டார். ‘அதிபர் ஷி என்னை இறுகக் கட்டித் தழுவிக்கொள்வார்’ என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பரவசம் பொங்க எழுதியிருந்தார். ஆனால் ஷி டிரம்ப்பைக் கட்டித் தழுவவில்லை.
கை குலுக்கினார். டிரம்ப் மிகையாகவும் உடனடியாகவும் வினையாற்றுபவர். ஷி கவனமாகவும் மரபு சார்ந்தும் செயலாற்றுபவர். ஷி கை குலுக்கலோடு நின்றுகொண்டமைக்கு, அது மட்டும் காரணமல்ல. அதில் வேறு செய்திகளும் இருந்தன. சந்திப்பு மூன்று நாள்கள் நீடித்தது. அப்போது அந்தச் செய்திகள் மேலும் துலக்கமாகின.
அமெரிக்க-சீன உறவு
1972இல் நிகழ்ந்த நிக்ஸன்-மாவோ சந்திப்பு அமெரிக்க-சீன உறவில் ஒரு புதிய தொடக்கத்துக்கு வழிவகுத்தது. 80களில் சீனா தனது கதவுகளை அகலத் திறந்தது. பன்னாட்டு மூலதனம் குவிந்தது. சீனா உலகின் தொழிற்சாலையாக உருவானது. 1990இல் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), சீனாவைவிட 15 மடங்கு அதிகமாக இருந்தது.
(1990 ஜிடிபி, பில்லியன் டாலரில், அமெரிக்கா 5,963, சீனா 360, இந்தியா 321). 2025இல் அது வெறும் 1.5 மடங்காகச் சுருங்கிவிட்டது. (2025 ஜிடிபி, பில்லியன் டாலரில், அமெரிக்கா 30,767, சீனா 19,626, இந்தியா 3,916).
தொடக்கத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு அனுசரணையாக இருந்தது அமெரிக்கா. ஆனால், சீனாவின் நாலு கால் பாய்ச்சல் அமெரிக்காவுக்கு உவப்பாக இல்லை. புத்தாயிரமாண்டுக்குப் பிறகு சீனாவை எதிரியாக வரித்தது அமெரிக்கா. சீன-அமெரிக்க உரசல்களில் மூன்று அம்சங்கள் குறிப்பிடத்தக்கன.
அவை: வணிகம், தொழில்நுட்பம், தைவான். இதை நோக்கர்கள் 3T’s என்பர் (Trade, Technology, Taiwan). இவற்றுடன் இப்போது நான்காவதாக ஈரானும் சேர்ந்துகொண்டது. இந்த நான்கு அம்சங்களும் இந்த முறை உரையாடலில் இடம்பெற்றன. அமெரிக்கா, சீனாவிடமிருந்து 308 பில்லியன் டாலர் பெறுமதியான பொருள்களைப் பெறுகிறது.