

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களைப் புதுப்பிக்கவும் அங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தவும் முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். முந்தைய ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களையும் கிடப்பில் போடும் அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு, அம்மா உணவகங்களை மேம்படுத்தும் முதல்வரின் நோக்கம் பாராட்டுக்குரியது.
2013ஆம் ஆண்டில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, அம்மா உணவகங்களைத் தொடங்கினார். நகர்ப்புறங்களில் நிலவும் உணவுப் பணவீக்கத்தால் மிகவும் பாதிப்படையும் வறியவர்களுக்கு மட்டுமின்றி, அதற்கு அப்பாற்பட்டவர்களுக்கும் இந்த உணவகங்கள் பெரிதும் பயனளித்தன. இன்றைக்கு மேற்காசியப் போரின் காரணமாக, எரிபொருள் பற்றாக்குறை சார்ந்த கடுமையான சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன.
அதையொட்டிய சிக்கன நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. உணவு விலை கடுமையாக உயர்ந்துவரும் நிலையில், உணவுப் பாதுகாப்பு (food security) என்பது பெரிய கேள்விக்குறியாக மாறிவருகிறது. குறைந்த விலை உணவு அங்காடிகள் மூடப்படுவதால் பெருவாரியான தொழிலாளர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
இத்தருணத்தில், அம்மா உணவகங்களை மேம்படுத்துவது என்கிற கொள்கை பெரும் ஆசுவாசம் அளிக்கிறது. முக்கியமான இந்தத் திட்டத்தை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வது என்பது பற்றியும் பேசியாக வேண்டும்.
வல்லுநர்களின் பரிந்துரை
தூய்மையான, நல்ல இடுபொருள்களால் உரு வாக்கப்பட்ட, ஒரே தரநிலையில் தயாரிக்கப்பட்டுப் பரிமாறப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள், இத்திட்டத்தை நீண்ட காலம் நிலைநிறுத்தக்கூடிய பொது நம்பிக்கையைப் பயனாளர்களிடையே உருவாக்கும்.
சிறுதானியங்கள் சார்ந்த உணவுப் பொருள்களைப் பொதுவிநியோகத்திலும் அம்மா உணவகங்களிலும் அறிமுகப்படுத்துவதன் மூலம், ஏழைகளுக்கும் மிகக் குறைந்த விலையில் ஊட்டச் சத்து மிக்க உணவை வழங்க முடியும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
மறுசீரமைப்புத் திட்டத் தின் மூலம் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். உணவில் உள்ள ஊட்டச்சத்தின் / கலோரி அளவு, பொருள்களின் தரநிலை, தயாரிப்பு நெறிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தெளிவான, நடைமுறைப்படுத்தக்கூடிய வரையறைகளை அரசு நிறுவ வேண்டும். மேலும் அவற்றை அனைவரும் அறியக்கூடிய வகையில் வெளியிட வேண்டும்; இதனால் குடிமக்களே கண்காணிப்பாளர்களாகவும், தரக்கட்டுப்பாட்டாளர்களாகவும் செயல்பட முடியும்.