

‘நான் பெரிய ஆளாக்கும்’ என்று கோட்டையின் உச்சியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு எல்லோரையும் செருக்கோடு குனிந்து பார்த்துக் கொண்டிருந்த வரலாற்றைக் கைப்பிடித்து இழுத்துவந்து வீதிகளில் இறக்கிவிட்டவர்களில் முக்கியமானவர், வில் டியூரண்ட்.
கடந்த காலம் என்பது அறிஞர்களுக்கும் நிபுணர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பாத்தியப்பட்ட நிலமல்ல. அது அனைவருக்குமான பொதுப்பாதை என்பதை டியூரண்ட் அளவுக்கு அழுத்தமாக வலியுறுத்திய இன்னொருவரைக் காண்பது அரிது.
40 ஆண்டுகள் செலவிட்டு, 11 தொகுப்புகளில் 15,000 பக்கங்களில் வில் டியூரண்ட் (1885-1981) தன் மனைவி ஏரியலோடு (1898-1981) இணைந்து கொண்டுவந்த பெருநூலை (The Story of Civilization) வரலாற்றாளர்கள் அங்கீகரிக்க மறுப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.
இருவரும் முறைப்படி வரலாறு பயின்றவர்கள் அல்ல; ஆய்வாளர்கள் அல்ல. கோட்பாட்டுரீதியான பார்வை எதையும் இவர்கள் முன்வைக்கவில்லை. புதிய தரவுகள் எதையும் கண்டறியவில்லை. புதிய கோணத்தில் எதையும் ஆராய்ந்ததில்லை. எனவே, எந்த வரலாற்றாளரும் இத்தொகுப்பைத் தன் பணிக்காக நாடியதில்லை. இந்நூலை வரவேற்றதும் இல்லை.
தங்களுடைய பலம், பலவீனம் என இரண்டையும் டியூரண்டுகள் அறிந்து வைத்திருந்தனர். இரண்டுமே ஒன்றுதான். குழப்பமற்ற, தெளிவான மொழிநடை. ‘ஐயோ, வரலாறு அலுப்பூட்டும் துறை’ என்பவர்கள்கூட நாகரிகங்களின் கதை வரிசை நூல்களை வாசித்தால், வரலாற்றை இப்படியும் எழுத முடியுமா என்று அதிசயிப்பார்கள். துறை சார்ந்தவர்களோ, பொது வாசகர்களுக்கான கதைகள் என்று ஒதுங்கி நிற்பார்கள்.
அமெரிக்காவில் பிறந்தவர் வில். பெற்றோர் அறிமுகப்படுத்திய இறையியலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு இதழியலைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட வில், நாளடைவில் ஒரு கல்லூரிப் பேராசிரியராக மாறிச் செவ்வியல் மொழிகள் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.
உக்ரைனில் பிறந்தவர் ஏரியல். நியூயார்க்கில் அவர் படித்துக்கொண்டிருந்தபோது வில் ஆசிரியராக இருந்தார். ‘பார்த்தவுடன் பிடித்துவிட்டது. கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டேன்’ என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார் வில். ஏரியலுக்கு அப்போது வயது 15. வில் அவரைவிட இரு மடங்கு பெரியவர்.