

‘ஒரு வரலாற்றாளர் தரையில் காலூன்றிவிடக் கூடாது. சிறகுகளை விரித்து மேகக்கூட்டத்தை உரசிக்கொண்டு பறக்க வேண்டும். இதுவரை இங்கு எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் தேசங்களின் வரலாறுதான்.
இதையே இனி நாம் தொடர்ந்துகொண்டிருக்க முடியாது. எல்லைக்கோடுகள் நம் பார்வையை மட்டுமல்ல, நம் அணுகுமுறையையும் சேர்த்துக் குறுக்கிவிடும். வரலாறு எந்த விதிகளுக்கும் இணங்கக் கூடாது. அது கோடுகளற்றது மட்டுமல்ல; கோடுகளுக்கு எதிரானதும்கூட’ என்கிறார் சஞ்சய் சுப்ரமணியம்.
1961இல் டெல்லியில் பிறந்து, பொருளாதார வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்று, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் சஞ்சய். ‘ஆசியாவில் போர்த்துக்கீசியப் பேரரசு’, ‘வாஸ்கோட காமா’, ‘ஐரோப்பியர்களின் இந்தியா’ (Europe’s India) ஆகியவை அவருடைய நூல்களுள் சில. மரபுகளை உடைத்துப் புதிய கோணங்களில் கடந்த காலத்தை ஆராயும் நூல்களாக இவை திகழ்வதற்குக் காரணம், அவரது தனித்துவமான பார்வை. வரலாற்றுத் துறையில் நிலவும் போதாமைகளை உணர்ந்த பிறகே இந்தப் பார்வையை அவர் வந்தடைந்தார்.
‘உலகப் புகழ்பெற்ற பல புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன். ஊர் உலகமே அவற்றைக் கொண்டாடினாலும், என்னால் அவற்றிலிருந்து எந்த உத்வகேத்தையும் பெற முடிந்ததில்லை. ஒன்று, பத்தி பத்தியாக அடர்த்தியாகத் தகவல்கள் அடுக்கப்பட்டிருக்கும்.
அல்லது ஏற்கெனவே சொல்லப்பட்ட கதையாடல்களை, மீண்டும் புதிய வடிவில் பக்கம் பக்கமாகச் சொல்லியிருப்பார்கள். எனவே, அவற்றைத் தவிர்த்துவிட்டு ஒப்பீட்டு ஆய்வு முறையை வந்தடைந்தேன். ஒரு பண்பாட்டை இன்னொரு பண்பாட்டோடு, ஒரு காலத்தை இன்னொரு காலத்தோடு, ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை வேறொன்றோடு ஒப்பிடும்போது தோன்றும் வேறுபாடுகளும் ஒற்றுமைகளும் நம் அறிவை விரிவாக்குவதைக் கண்டேன்.
ஆனால் பெரும்பாலான இத்தகைய ஒப்பீடுகள் கிழக்கைக் காட்டிலும் மேற்கே சிறந்தது, இந்தப் பண்பாட்டைக் காட்டிலும் அதுவே மேலானது என்பதுபோன்ற தட்டையான முடிவுகளுக்கே வந்துசேர்வதால் என் ஆர்வம் வடிந்துவிட்டது.
எடுத்துக்காட்டுக்கு, ‘பர்மா அல்லது லாவோஸ் அல்லது தாய்லாந்து ஆகிய நாடுகளின் அரசமைப்புமுறை பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளின் முறையை ஒத்திருக்கிறது என்னும் முடிவுக்கு ஓர் ஆய்வாளரால் வந்துசேர முடியும்.