

பிரான்ஸிலும் பிரிட்டனிலும் ஒரு விநோத நடைமுறை பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டுவந்தது. யாருக்காவது உடலில் நோயோ வாதையோ இருந்தால் மன்னரிடம் செல்வார்கள். தன் முன் வந்து வணங்கிக் குனிபவரை, மன்னர் தன் பொற்கரத்தால் மெலிதாகத் தீண்டுவார்... ஆசிர்வதிப்பதுபோல்.
உடனே நோய் குணமாகிவிடும். மூடநம்பிக்கை என்றும் பழங்கால வேடிக்கை என்றும் அனைவரும் கடந்து சென்றுகொண்டிருந்த இந்த மாயத்தை விரிவாக ஆய்வுசெய்ய வேண்டும் என்று பிரெஞ்சு வரலாற்றாளர் மார்க் பிளாக் (1886-1944) விரும்பினார். இப்படியொரு மரபு எப்படித் தோன்றியது என்பதைக் காட்டிலும் பிளாக்குக்குக் குறுகுறுப்பை ஏற்படுத்திய கேள்வி, எப்படி நூற்றாண்டுகளாக எளிய மக்களிடம் இப்படியொரு நம்பிக்கை உயிர்ப்புடன் இருந்தது என்பதுதான்.
அரசியல், சமூகம், பொருளாதாரக் கட்டமைப்பு அனைத்தும் மாறிக்கொண்டே இருந்தபோதும் ஒரு நம்பிக்கை மட்டும் மாறாமல் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டது எப்படி? அப்படியானால், கூட்டு மனித மனம் என்று ஒன்று உண்டா? ஓர் எளிய நம்பிக்கையை அது வாழ்ந்த வரலாற்று, பண்பாட்டுப் பின்னணியில் பொருத்தித் திகைப்பூட்டும் சித்திரம் ஒன்றை அளிக்க முடியும் என்பதை பிளாக் தன் நூலின் மூலம் (‘தி ராயல் டச்’) மெய்ப்பித்தார்.
மானுடவியல் நோக்கில் ஐரோப்பாவின் மத்தியக் கால நம்பிக்கையை அவர் ஆராய்ந்த விதத்தை, வரலாற்றுத் துறையில் நிகழ்ந்த ஒரு புரட்சி என்றுதான் அழைக்க முடியும். மன்னர் கை வைத்ததும் நோயாளிகள் குணமடைந்தது அல்ல, எளிய மக்களின் நம்பிக்கை ஓர் அமைப்பாக, ஒரு பண்பாட்டு உணர்வாக நூற்றாண்டுகளுக்குத் திரண்டு நின்றதுதான் மாயம்.