

காய்ந்து மட்கிக் கிடக்கும் இலைகள். முறிந்துபோன மரக்கிளைகள். மண்ணோடு மண்ணாகக் கிடக்கும் குச்சிகள். அவற்றைக் கண்ட பெண்களின் கண்களில் மின்னல். பொன் துளிகளைக் கண்டதுபோல் முதுகை வளைத்துக் குனிந்து ஆசையோடு அவற்றை எடுத்துக்கொண்டார்கள். இன்றைய இரவுக் குளிரைப் போக்க இவற்றை எரியவிட்டால் போதும். சற்றுத் தள்ளிச் சில ஆண்கள் விறகுக்கட்டைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தார்கள்.
குழந்தைகள் தனித்த ஓர் உலகில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்து பழங்களையும் காய்களையும் எடுத்துக் கடித்துக்கொண்டும் தூக்கிப்போட்டுக் குதித்துக்கொண்டும் இருந்தனர். இந்த மக்களைத்தான் காவலர்கள் வளைத்துப் பிடிக்கப்போகிறார்களா? இவர்களைத்தான் திருடர்கள் என்று அரசு இனி அழைக்கப்போகிறதா? ஒரு குறு நாவல், ஒரு நாடகம், சில காதல் கவிதைகள் ஆகியவற்றை முயன்று பார்த்துவிட்டு, கற்பனை போதும், நிஜ உலகை ஆராயத் தொடங்குவோம் என்று தத்துவத்தின் பக்கம் கார்ல் மார்க்ஸ் திரும்பியபோது ஜெர்மனி (அப்போது பிரஷ்யா) ‘விறகுத் திருட்டு’ தொடர்பான ஒரு சட்டத்தைக் கொண்டுவர முயன்றுகொண்டிருந்தது.
மார்க்ஸ் துணுக்குற்றார். சுள்ளி பொறுக்கும் ஓர் எளிய விவசாயியின் கரங்களில் விலங்கு பூட்டப்படுமா? வறுமை தண்டிக்கப்பட வேண்டிய குற்றமா? இது யாருக்கான சட்டம்? நேற்றுவரை மரத்தின் இலை. இன்று அது ஒருவரின் தனியுடைமையாக மாறியது எப்படி? இந்த மரம் என்னுடையது, அந்த மேகம் என்னுடையது, என் நிலத்தில் வந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் சட்டப்படி எனக்குத்தான் சொந்தம் என்று ஒருவர் சாதிக்க முடியுமா? செல்வம் ஏன் ஒரே இடத்தில் குவிகிறது? விவசாயிகளும் தொழிலாளர்களும் எவ்வளவு உழைத்தாலும் அவர்களுக்கு நிலம் ஏன் கிடைப்பதில்லை? உழைப்பின் பொருள் என்ன? இருப்போர், இல்லாதோர் என்னும் பிரிவினை உலகில் ஏன் தோன்றியது? அரசு ஏன் இருப்போருக்குச் சாதகமாகவே எல்லாக் காலங்களிலும் நடந்துகொள்கிறது? ‘இது அவர் மரம்.