

இலக்கிய உலகில் அழியாத் தடம் பதித்த பத்திரிகையாளர் சரஸ்வதி வ.விஜயபாஸ்கரனின் நூற்றாண்டு இது. பொதுவுடைமைவாதி, பத்திரிகையாளர் என்கிற இரு பெரும் அடையாளங்கள் விஜயபாஸ்கரனுக்கு உண்டு. எனினும் பொதுவுடைமை பலமாகப் பின்நிற்க, அறச்சார்பு கொண்ட பத்திரிகையாளர் என்றே காலம் அவரை முதன்மைப்படுத்திக் கொள்கிறது.
அழியாத அடையாளம்
வடிவேலு விஜயபாஸ்கரன் (1926 - 2011) இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர். ‘விடிவெள்ளி’ (1951), ‘சமரன்’ (1962) போன்ற பல பத்திரிகைகளை முன்னாலும் பின்னாலும் தொடங்கியிருந்தாலும், இடையில் அவர் நடத்திய புகழ்பெற்ற ‘சரஸ்வதி’ (1955 - 62) பத்திரிகையின் பெயரிலேயே வரலாற்றில் அவர் நினைவுகூரப்படுகிறார்.
பொதுவுடைமைக்காரராக வாழ்ந்த அவரது பத்திரிகையின் பெயர் என்னவோ கடவுள் பெயர். முற்போக்காளர் பிரேம்சந்த் நடத்திய அச்சகத்தின் பெயரும் சரஸ்வதி என்பது ஒரு தற்காப்பு. இங்கு விஜயபாஸ்கரனின் வாழ்க்கைத் துணைவரின் பெயரும் சரஸ்வதி.
விஜயபாஸ்கரனின் தந்தை பா.து.வடிவேல், தாராபுரத்தில் புகழ்பெற்ற காங்கிரஸ் தியாகி. விஜயபாஸ்கரனின் இளமைக் கால நண்பர், எஸ்.வி.ராஜதுரை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் படிக்கச் சேர்ந்த விஜயபாஸ்கரன், இடதுசாரிகளின் தொடர்பால் போராட்டக்காரராக மாறினார்; பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
‘நவ இந்தியா’, ‘தினத்தந்தி’, ‘பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்’ (இன்றைய என்.சி.பி.எச்.), ‘விடிவெள்ளி’, ‘சக்தி’, ‘ஹனுமான்’, ‘சரஸ்வதி’, ‘சமரன்’, ‘சோவியத் நாடு’ உள்ளிட்ட சென்னைப் பத்திரிகை நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பங்காற்றினார். பத்திரிகைப் பணி, வெளிப்படையான கட்சிப் பணி ஆகியவற்றை முடித்துக்கொண்டு, கேரளத்தின் திருச்சூரில் வாழ்க்கையைக் கழித்தார். பின்னர் கோயம்புத்தூர் சென்றடைந்தார்.
அனைவருக்குமான தளம்
சென்னையில் வாழ்ந்த காலத்தில் விஜயபாஸ்கரன் எட்டு பத்திரிகைகளில் பணியாற்றினார். அதில் ‘விடிவெள்ளி’, ‘சமரன்’, ‘சரஸ்வதி’ ஆகிய மூன்று பத்திரிகைகளைத் தானே நடத்தினார். ‘சரஸ்வதி’ இதழின் களஞ்சியத்தைத் தொகுத்தார்.
பல இதழ்களின் களஞ்சியங்களை வெளியிட்ட கலைஞன் பதிப்பகம்தான் சரஸ்வதி களஞ்சியத்தையும் கொண்டுவந்தது. அதற்கு விஜயபாஸ்கரன் எழுதிய முன்னுரை, ஒரு குறிப்பிட்ட கால இதழியல் வரலாற்றின் சுருக்கம்.