

தான் உண்டு, தனது அறிவியல் உண்டு என்று உயிர் வேதியியல் ஆய்வுகளில் நீண்ட காலமாகத் தன்னைத் தொலைத்திருந்த ஜோசப் நீதம், ஒரு நாள் திடீரென்று தனது ஆய்வுக்கூடத்திலிருந்து வெளியில் வந்து சீனாவை அணைத்துக்கொண்டபோது, மேற்குலகம் அந்நாட்டை ஒரு பிற்போக்கான நிலமாகவும் பிடிபடாத புதிராகவும் கருதி ஒதுக்கி வைத்திருந்தது.
இவ்வளவு புத்திக்கூர்மை கொண்டவர், இவ்வளவு ஆய்வுகளைப் பதிப்பித்தவர், அறிவியல் உலகில் ஒரு நட்சத்திரமாக மின்ன வேண்டியவர், எதற்காக அவர் படித்து, தேர்ந்த துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஒன்றுக்கும் உதவாத சீனாவைப் பற்றிக்கொள்ள வேண்டும்? ஒரு நல்ல அறிவியலாளருக்கு வரலாற்றுத் துறையில் என்ன வேலை? அவர் வாழ்வில் சீனா குறுக்கிட்டதை ஒரு தனிக் கதையாகவே விரிக்க முடியும்.
அப்போது ஜோசப் நீதம் (1900-1995) கேம்பிரிட்ஜில் பணியாற்றிக்கொண்டிருந்தார். மற்றொரு பேராசிரியரான டாரத்தியைக் காதலித்து மணந்துகொண்டிருந்தார். லூ என்னும் இளம்பெண் 1937இல் டாரத்தியின் அணியில் இணையும்வரை அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை.
ஷாங்காயில் உயிர்ச்சத்துகளை ஆராய்ந்துகொண்டிருந்த லூ, ஜப்பானின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி கேம்பிரிட்ஜில் இணைந்து தன் ஆய்வுகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார். அவருடைய ஆற்றலால் ஈர்க்கப்பட்ட டாரத்தி, லூவைத் தன் கணவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.
ஒரு நாள், நீதம் தன் சிகரெட்டை வெளியில் எடுத்து, இதற்கு சீன மொழியில் என்ன பெயர் என்று லூவிடம் கேட்க, அவரும் பதில் அளித்திருக்கிறார். அவ்வளவுதான். ஒரே நேரத்திலா, அடுத்தடுத்தா என்று தெரியவில்லை; சீன மொழியின்மீது மலர்ந்த நீதமின் காதல் சீனாவின் மீது விரிந்து, ஒரு கட்டத்தில் லூ மீதும் படர்ந்து பரவியது (இக்காதலை டாரத்தியும் ஏற்றுக்கொண்டார்).
1943ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, துறை சார்ந்த ஆய்வுகளுக்காக பிரிட்டன் முதல் முறையாக நீதமை சீனாவுக்கு அனுப்பி வைத்தது. சீனா அவரை இறுகப் பற்றிக்கொண்டது. சீன மொழியைக் கற்றுத் தேர்ந்தார். பண்டைய சீனத்தின் வரலாறு, பண்பாடு, சமூக அமைப்பு, அறிவியல் அனைத்தின் மீதும் பேரார்வம் கொண்டார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு சென்ற தனது ஆய்வின் மூலம் சீனா குறித்த உலகின் பார்வையைத் தலைகீழாக்கினார். நீதம் அடிப்படையில் ஓர் அறிவியலாளர் என்பதால் ‘பண்டைய சீனாவில் எல்லாமே இருந்தது’ என்று சொன்னால் மட்டும் போதாது.